Quick Links

Tuesday, April 8, 2014

திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனார்

எல்லீஸ் அவர்கள் 1812இல் வெளியிட்ட திருக்குறள் அறத்துப்பால் (அறப்பால்) என்பதே சுவடிப் பதிப்பு வெளியீடாக வெளிவந்த முதல் தமிழ் அச்சு நூலாகும். எல்லீஸ் திருக்குறள் வெளியாகி எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இருபத்து ஐந்து நூல்களுக்கு மேல் பதிப்பித்த திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனார் பற்றி எந்தவொரு பதிப்பு நூலிலும் செய்திகள் காணப்படவில்லை (தமிழ்ப் பதிப்பின் முன்னோடிகள் என்று சொல்லக்கூடிய பட்டியலில், தமிழ்ப் பதிப்புப் பற்றிய ஆய்வு நூல்களில், கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்திதான்). தமிழ்த் தாத்தாவைக் கொண்டாடுவதிலேயே காலம் கழித்த அறிஞர்கள் கண்களில் கோனாரும் தெய்வசிகா மணிக் கவுண்டரும் தட்டுப்படவேயில்லை. பதிப்பு வரலாறுகள் மறந்தாலும் மறைத்தாலும் பதிப்புப் பணிகள் கொங்கில் ஏராளமாக அன்றுமுதல் இன்றுவரை நடந்து கொண்டுதான் உள்ளன. இன்றளவும் ஓலைச் சுவடிகளும் கல்வெட்டுகளும் தேடிய இடமெல்லாம் கொங்கில் கொட்டிக் கிடக்கின்றன.

பதிப்புப் பணியின் முன்னோடிகளில் ஒருவரான உ.வே. சாமிநாதையர், தான் பதிப்பித்த நூல்களில் மனம் கவர்ந்ததாகக் கூறுவது 'சிந்தாமணி'யைத்தான். சேலம் ராமசாமி முதலியார் தூண்டுதலில்தான் ஐயர் அவர்கள் சிந்தாமணியைப் பதிப்பித்தார். அதேபோல் கொங்குவேளிரின் 'பெருங்கதை'யைத் தேடி உ.வே.சா. ஈரோடு வந்தார்.
ஈரோடு மேலம்பாளையம் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரைச் சந்தித்து, "உம்மை யான் நினைத்தபடியே உம் தோற்றம் இருக்கிறது. சங்க நூற்கள் பலவற்றைப் பதிப்பித்த மகிழ்ச்சியினும் கொங்குவேள்மாக்கதை பதிப்பித்ததினால் உண்டான மகிழ்ச்சி பெரியதாயிற்று. அதன் பகுதிகள் சில கிடைக்கவில்லை. அவை உம்மிடம் இருப்பதாகச் சொன்னார்கள். இருந்தால் கொடும். இல்லாவிட்டாலும் அப்பகுதி உமக்குக் கிடைக்கும். கிடைத்தபொழுது என்னிடம் கொடும். அல்லது நீரே பதிப்பித்துவிடும். அது உம்மவர் செய்த நூல், உம் நாட்டு நூல்" என்று கூற, உள்ளம் மிக மகிழ்ந்ததாகத் தம் பஞ்சமரபு (இரண்டாம் பகுதி, முன்னுரை) நூலில் குறிப்பிடுகிறார் தெய்வசிகாமணிக் கவுண்டர்.
கொங்கு மண்டல சதகத்தை முத்துசாமிக் கோனார் பதிப்பித்தபோது உ.வே.சா. சாற்றுக்கவி அளித்துள்ளார். உ.வே.சா. நூலகக் கையெழுத்துப் பிரதியில் சிந்தாமணி, சூளாமணி போன்றவற்றையும் கொங்கு நாட்டு இலக்கியங்கள் என்று உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

தி.அ. முத்துசாமி கோனார் (1858-1944)
இன்றைய நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1858ஆம் ஆண்டில் பிறந்த கோனார், திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிறகு தெலுங்கும் வடமொழியும் கற்று வல்லவரானார். அட்டாவதானம், இசை எனப் பல்துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மலைப்படி அமைக்கும் ஆளாகச் சேர்ந்து, பின்னர் 'மேஸ்திரி' ஆனார். விவேக திவாகரன் என்ற அச்சுக் கூடத்தைத் தொடங்கிக் கொங்குவேள், விவேக திவாகரன், கொங்கு மண்டலம் போன்ற இதழ்களை நடத்தினார்.
குழந்தையாநந்த தேசிகர் பாடிய 'அர்த்தனாரீசுர மாலை'யைக் கோனார் 1882இல் பதிப்பித்தபோது, "இஃது பாடங்கள் தோறும் சீர்கள் மிகுந்துமிருந்ததைத் திருச்செங்கோடு தாலூகா படிமேஸ்திரி முத்துச்சாமி கோனாரவர்களால் பல பிரதிரூபங்களைக் கொண்டாராய்ந்து சுத்த பாடமாக்கி மேற்படியூர் அர்த்தநாரி முதலியார் கேட்டுக் கொண்டபடி" வெளியிட்டதாக நூலில் குறிப்புள்ளது. அதே ஆண்டு 'கருணாகரமாலை' எனும் நூலைக் கோனார் பதிப்பித்தார். இவ்வாறு சிறிதும் பெரிதுமாகக் கோனார் பதிப்பித்த நூல்களில் இருபத்தைந்து நூல்கள் திருச்செங்கோட்டைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கோனாரே இயற்றிப் பதிப்பித்துள்ளார். இவை தவிர சர்க்கரை மன்றாடியார் காதல் (1913), சிவமலைக் குறிவஞ்சி (1918), பாம்பண கவுண்டர் குறிவஞ்சி (1917), மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை (1916), பூந்துறைப்புராணம் (1917) கொங்கு மண்டல சதகம் (1923) எனப் பல நூல்களையும் பதிப்பித்தார்.
1934இல் 'கொங்குநாடு' எனும் புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் இது முழுமைபெறாத நூலாக நின்றுபோனது. இருந்தபோதிலும் கொங்குநாடு நூல் வடிவமாக எங்கும் கிடைக்காமல், நகலச்சுப் பிரதியாய் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்தது. எழுபது வருடங்களுக்குப் பிறகு, 2004இல் பெருமாள்முருகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கொங்குநாடு, புதுமலர்ப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் முன்னுரையே, 'கொங்கு நாட்டு வரலாற்றின் முதனூல்' எனும் தலைப்பில் அமைந்துள்ளது. அதற்குக் காரணம், கொங்கு நாட்டில் நூல் பதிப்பிக்கும் பெருமக்களுக்கே முத்துச்சாமிக் கோனார் பற்றியோ கொங்குநாடு நூல் பற்றியோ செய்திகள் 'எட்டவில்லை' என்பதே. அதனால்தான் பெருமாள்முருகன் எழுதும்போது, ''தற்போது நான்காம் பதிப்பாக வெளியாகியிருக்கும் கோவைக்கிழார் கோ.ம. இராமசந்திரன் செட்டியார் எழுதிய 'கொங்கு நாட்டு வரலாறு' நூலின் பதிப்பாசிரியர்கள் அதன் பதிப்புரையில், 'கொங்கு நாட்டைப் பற்றி யாரும் எழுதவில்லை; கோவைக்கிழார் முன்கை எடுக்கிறார் என்று கூறுகின்றனர். இக்கருத்துத் தவறானது. கோவைக்கிழாரின் நூல் 1954இல் வெளியானது. அதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே கொங்கு நாட்டு வரலாறு எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் முத்துச்சாமிக் கோனார் என்பதை இந்நூல் நிறுவும்" என்றார். கோனாரின் சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் 'தக்கை ராமாயண'த்தைப் பதிப்பித்துப் பின் அச்சுப் பணி முடியும் முன்னர் கோபத்தில் அதைத் தீயிட்டு விட்டதாகத் தெரிகிறது.
முத்துசாமிக் கோனார், ஒரு நூலைப் பதிப்பிக்கும் முன், பதிப்பு நெறிமுறைப்படி அந்நூலுக்குரிய பல சுவடிகளைத் தேடியே பதிப்பித்தார். கொங்கு மண்டல சதகம் ஏட்டுச் சுவடி முதலில் கிடைத்தபோது குறைப் பிரதியாக 40 செய்யுள்களுடன் இருந்தது. பின்னர் பல இடங்களில் தேடியதன் பயனாக 5 குறைப் பிரதிகளும் 6 முழுமையான பிரதிகளும் கிடைத்தன.
ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது, அதற்கு ஆதாரமான பல செய்திகளையும் திரட்டித் தந்தார். கொங்கு மண்டல சதகம் சம்பந்தமாக, "கோயில் பூசகர், மாணிக்கத்தாள், சாசனம் (பட்டயம்), நாட்டுக் குருக்கள், நாட்டுப் புலவர்கள் இவர்களைத் தேடிக் கண்டு கேட்டுச் சில ஒருவாறு விளங்கின. சங்க நூல் பதிப்புகள், மதுரை செந்தமிழ்ப் பிரசுரங்களிற்சில, நமது ராஜாங்கத்தாரால் எடுத்து வெளிப்படுத்தியுள்ள சிலாசாசனங்கள், என்னாற் கண்ட சிலாசாசனங்கள், செப்பேடுகள் முதலியன இதற்குத் துணையாக நின்று பண்படுத்தின. இவற்றில் இச்சதகத்துக் கதைகள் தெரிந்தன. ஆதலின் கருத்துரை, வரலாறு, மேற்கோள்கள் எழுத ஒருவாறு இயன்றன" என எழுதுவதின் மூலம் அவர் பதிப்புக்கு எடுத்துக்கொண்ட கவனம் தெரிகின்றது.
இதனால்தான் திரு.வி. கல்யாணசுந்தரனார்,
"ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து
உரைகண்டே ஊன்றும் அச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த செல்வன்".
எனக் கோனாரைப் பாராட்டுகிறார். "இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட ஆண்டறிக்கைகள், கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு தமிழ்நாட்டு நூல் பதிப்பாசிரியர் கோனார் அவர்களேயாவார்" என்று புலவர் செ. இராசு போற்றுவார்.
பாம்பண கவுண்டர் குறவஞ்சி நூல் முகவுரையில் கோனார் தமக்கென அமைத்துக்கொண்ட பதிப்பு நெறியைத் தெளிவுபடுத்துகிறார். "அந்தந்த நாட்டிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுக்கு, தங்கள் முன்னோர்களுக்கு உள்ள கீர்த்தி பரவும்படிக்கு மாத்திரமல்ல, எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணங் கொண்டவர்களாய்ப் பழைய காலத்திலிருந்த புலவர்கள் அருமையுறத் தெய்வத்தின் பேரில், அல்லது உபகாரிகள் பேரில் இயற்றிய பிரபந்தங்களைச் சொற்பப் பொருட்செலவு செய்து அச்சேற்றுவிப்பார்களானால் நம் நாட்டுக்குப் பேருபகாரம் புரிந்ததாகும்" என்கிறார் கோனார்.
மேலும், "இது ஒரு நரஸ்துதியாக இருந்தாலும் (பாம்பணன் பற்றி) இதனுள் மறைந்து காணும் சில சரித்திரக் குறிப்புகள் உள்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி செய்யப் புகுவோருக்குச் சிறிது உபகாரமாகுமென்பது இதிலடங்கியுள்ள "பாம்பண கவுண்டன்' வரலாற்றுச் சுருக்கம் என்பதில் விளங்கும்" எனத் தனி மனிதனைப் போற்றுவதை விட, இது வரலாற்று ஆய்வுக்கு உதவும் எனும் தன்மையிலேயே பதிப்புப் பணியை மேற் கொண்டுள்ளார்.
1934 முதல் 1944 வரை கண்பார்வை இழந்து வாழ்ந்த கோனார் 54 ஆண்டுகள் தமிழ்ப் பணி புரிந்து, 86 ஆண்டுகள் வாழ்ந்து 2.11.1944 அன்று மறைந்தார்.

உதவிய நூல்கள்:
1. புலவர் செ. இராசு, கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991
2. தி.அ. முத்துசாமிக் கோனார், கொங்குநாடு, புதுமலர் பதிப்பகம், கோவை, 2004
குறிப்பு: கு. மகுடீஸ்வரன் கோபி கலைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர். வட்டார ஆய்வுகளிலும் பதிப்பியலிலும் ஆர்வம் மிக்கவர்

1 comment:

  1. ஐயா ஆனால் கௌண்டர்கள் அவர்கள் தங்களை யாதவர்களாக எற்றுக் கொண்டவர்கள்

    ReplyDelete