Quick Links

Monday, October 26, 2015

ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்தான் தேனாற்று அம்மன்.

பிள்ளையார்பட்டியைத் தழுவி நிற்கும் சிராவயல் புதூர் கிராமம், மஞ்சு விரட்டுக்குப் புகழ்பெற்றது. இவ்வூரில்தான் இருக்கும் திருத்தலம் தேனாட்சியம்மன் கோயில். சிராவயல் புதூரைச் சேர்ந்த இடையர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று அக்கம் பக்கத்து ஊர்களில் மோர் விற்றுவிட்டு வருவார். திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது அவரது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல்படியே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

சேவை செய்த இடையர் குலப்பெண்

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம் மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவியது. அந்தக் கோயிலைச் சுற்றி குட்டியாய் இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று கிடந்தார். உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்தார். அதன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

சித்ரா பவுர்ணமி

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது.

No comments:

Post a Comment