சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தென்மண்டலச் செயலர் எஸ். மரியசுந்தரம் வலியுறுத்தினார்.
இந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில், இம்மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் பிரதான கோரிக்கையாக இருப்பது இலவச கல்வியும், இலவச மருத்துவமும்தான். இக் கோரிக்கையை வென்றெடுக்கவும், மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டுசெல்லும் வகையிலும் பாளையங்கோட்டையில் வரும் 27ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் தமிழக மேலிடப் பார்வையாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதரராவ் சிறப்புரையாற்றுகிறார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் ஸ்ரீநிவாசன், யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் பேசுகின்றனர்.
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியுள்ள அரசு, அதன் விவரங்களை முழுமையாக உடனடியாக வெளியிட்டு, அந்தந்த சாதியினருக்குரிய பிரதிநிதித்துவப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
வரும் பேரவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நான்குனேரி ஆகிய 4 தொகுதிகளை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம். முத்து, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் எஸ். சரவணன், ஒன்றியச் செயலர் சிவந்திப்பட்டி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment