பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சனிக்கிழமை யாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே யாதவர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் வி.தியாகராஜன் தலைமை வகித்தார்.
திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோனின் சிலையை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்ட யாதவ மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி, கூட்டுறவுத் தேர்தலில் யாதவர்களுக்கு அரசியல் கட்சியினர் உரிய பங்கை அளிக்க வேண்டும். யாதவர் இளைஞர்கள், மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், யாதவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






















