தொகை
"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"
- திருத்தொண்டத்தொகை
வகை
தாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த
தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன்
ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே.
- திருத்தொண்டர் திருவந்தாதி
விரி
926.
மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்,
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற,
ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற,
நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.
1
புராணம் :- ஆனாயர் என்ற பெயராலறியப்படும் நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே இலை மலிந்த
சருக்கத்து ஏழாவது ஆனாய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்.
தொகை :- அலைகள் பெருகிய புனல் சூழ்ந்த திருமங்கலம் என்ற
தலத்தில் அவதரித்த ஆனாயருக்கு அடியேனாவேன்.
மங்கை - திருமங்கலம். ஆனாயர் - ஆன் ஆயர் - ஆ மேய்க்கும்
ஆயர் குலத்தவர். ஆனாயர் (933) என்றது காண்க. நாயனாரது இயற்பெயர்
விளங்கவில்லை. ஊரும் ஊர்ச்சிறப்பும், பேரும், தொழிலும் திருத்தொண்டின்
குறிப்பும் முதனூல் பேசிற்று.
வகை :- யாவைக்கும் தாயானவரும், சடைமேற் பிறைவைத்த
தூயவரும்ஆகிய சிவபெருமானுடைய திருவடிகளை மனதில் விடாதுபற்றி,
அத்தொடர்ச்சியாலே அவருடைய பழமையாகிய சீர்களை வேய்ங்குழல்
நாதத்தினாற் பரவுகின்ற மேன்மழ நாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தின்
ஆனாயர் என்னை மகிழ்ந்து ஆட்கொண்டருளியவர்.
மேன்மழ நாட்டு மங்கலக்கோன் ஆனாயன், தூயவன் பாதம்
தொடர்ந்து அவனது சீர் துளையாற் பரவுபவன்; அவன் என்னை ஆண்டவன்
எனமுடித்துக் கொள்க. தாயவன் யாவுக்கும் "தாயவன்காண் உலகுக்கு"
(கச்சித்திருத்தாண்டகம்). தொடர்தல் - விடாது பற்றுதல் குறித்தது.
துளைவேயாற் பரவுபவன் என மாற்றுக. துளைகளின் வழியே பண் எழுப்பிப்
பரவுதலால் துளையாற் பரவும் என்றார். மங்கலம் - நகரப்பெயர்.
விரிபுனன் மங்கலம் - "அலைமலிந்த புனன் மங்கை" என்பது முதனூல்;
(தொகை). என்னை உவந்து ஆண்டவன் - "அடியேன்" என்ற முதனூல்
முடிபின் தாற்பரிய முணர்த்திற்று. யான் அடியேன் எனப் பணிதலும்,
அவனும் என்னை ஆண்டனன். உவந்து - அடிமையை
ஏற்றுக்கொண்டு. விரிபுனல் இரண்டு ஆறுகள் கூடிச் சேர்தலால் இவ்வாறு
கூறினார். "இது அலைமலிந்த புனன்" என்ற முதனூற் பொருளை எடுத்து
ஆண்டு வற்புறுத்தியதாம்.
நாயனாரது, நாடு - மேன்மழ நாடு - (926); நகரம் - விரிபுனன்
மங்கலம் (932); பெயரும் குலமும் தொழிலும் - ஆனாயர். "ஆயர்
குலத்தவர்" (933); "ஆனிரை அளித்துள்ளார்" (935); திருத்தொண்டின்
திறமும் வரலாறும் - தொல் சீர் துளையாற் பரவும் வேயவன் என்றது
- "தம் பெருமானடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கருவிக் குழல்
வாசனை மேற்கொண்டார்" (937), (938), (939); "வாயினின் மெய்யின் வழுத்து
மனத்தின் வினைப்பாலின்..........பிரானடியல்லது பேணாதார்" (934);
"கொன்றையினை நேர்நோக்கி..........அன்பை உடையவர்பால் மடை திறந்தார்"
(946), (950), (952); தாயவன் - அருட்கருணை தானாய........தவவல்லியுடன்
(963); சடைமேற் றனித்திங்கள் வைத்த தூயவன் - மதி நாறும் சடைதாழ
(963); நாறுதல் - தோன்றுதல் - முளைத்தல். இவ்வாறு விரிவாய்
இப்பொருள்களை விரிநூல் விரித்தமை கண்டுகொள்க.
926. (இ-ள்.) மேன்மழ........நீர்நாடு - மேன்மழநாடு என்று
சொல்லப்படும் நீர்வளம் மிக்க நாடு; மாடு........வந்து ஏற - பக்கங்களில்
பரவுகின்ற வாசனையுடைய அழகிய சோலைகளில் வான்மதி வந்து ஏறவும்;
சூடு - சுரும்பு ஏற - சூடடிக்கும் நெல்லரிகள் பரப்பிய பண்ணையின்
வரம்புகளில் வண்டுகள் ஏறவும்; ஈடு.........இளைத்து ஏற - மேன் மேல்
அடுக்கியுயர்த்த வைக்கோற் போர்களில் மேகங்கள் இளைத்து ஏறவும்; நீடு
வளத்தது - நிலை பெறும் வளத்தையுடையது.
(வி-ரை.) விரைப்பொலிசோலை - விரை - மணம்; பொலிதல் -
அழகுடன் விளங்குதல். கண்ணுக்கினிய காட்சியழகு மட்டும்கொண்டு
மணமில்லாதசோலைகளைப் பெருஞ்சிரமப்பட்டு வைத்துக் களிக்கும்
இந்நாள்மாக்கள் இதனைச் சிந்திப்பார்களாக.
வான்மதி வந்து ஏற - மிக உயர்ந்து வளர்ந்த சோலையின் உயர்ச்சி
குறித்த உயர்வுநவிற்சியணி. மதி வானவீதியிற் செல்லுவதாயினும்,
இச்சோலையினது வானளாவிய உயர்ச்சியினாற் கீழிருந்து, புறத்துக்
காண்போர்க்கு, அது (மதி) இதனுள் வந்து நுழைந்து மேல் ஏறுவதாகப்
புலப்படும் என்பது. ஏறுதல் - மதி, முளைத்த இடத்தினின்றும் பொழுதேற
ஏற மேற்போதல். "வெண்மதியம், சோலைதொறு நுழைந்துபுறப் படும்பொழுது"
(திருஞான - புரா - 8) என்ற இடத்து இக்கருத்தை மேலும்நயம்பட விரித்தது
காண்க. சோலையின் மரங்களின் உயர்ச்சியை "மந்தியும் அறியா மரன்பயில்
அடுக்கத்து" என்று உயர்வு நவிற்சிபடக் கூறும் திருமுருகாற்றுப்படையும்,
"வான மதிதடவ லுற்ற விளமந்தி, கான முதுவேயின் கண்ணேறித் - தானங்,
கிருந்துயரக் கைநீட்டு மீங்கோயே நம்மேல், வருந்துயரந் தீர்ப்பான் மலை"
என்ற ஈங்கோய்மலை யெழுபதும் (68) பிறவும் காண்க.
சூடு பரப்பிய பண்ணை - சூடு - நெற்கதிர்களில், தலையடியில்
உதிராத மணிகளை உதிர்க்கும் பொருட்டுப் பரப்பிய நெல் அரிகள்.
இவற்றை மேதிகளால் மிதிப்பித்து (கடாவிடுதல் என்பர்) நெல்லுதிர்த்துச்
சேர்த்தல் மரபு. (அரிகளை முதலில் அடித்தபோது உதிர்ந்தநெல் தலையுதிரி
எனப்படும்.) 73ல் உரைத்தவை பார்க்க.
சூடு...........சுரும்பு ஏற - சூடு உதிர்க்கப் பரப்பிய வயல்களில்,
வரம்புகளில் வண்டுகள் ஏறுதலாவது சூடு அரிகள் பரப்பும்போது அங்குத்
தாமரை நீலம் முதலிய கொடிகளும் மலர்களும் உள்ளமையால் அவற்றின்
மொய்த்த வண்டுகள் தப்பி ஓடுதற்கு ஒதுங்கி அங்குநின்றும் வரம்புகளில்
ஏறுதல். "அரிதரு செந்நெற்சூட்டி னடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்......விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி
வெற்பு வைப்பார்" (73) என்றது காண்க.
ஈடு பெருக்கிய போர் - சூடு அடித்தபின் வைக்கோல்களைப் பெரும்
குவியல்களாக அடுக்கிக் குவித்த போர்கள். ஈடு - ஆதி நீண்டுவந்த
முதனிலைத் தொழிற்பெயர். ஈடு - இடுதலினாலே - ஒன்றன்மேல் ஒன்று
குவியலாக இடப்படுதலினாலே. போர் - வைக்கோற்போர். ஈடு -
ஒன்றுக்கொன்று சமமாகச்செய்த என்றும், பெருமைமிகச் செய்த என்றும் உரை
கூறுவாரும், போர் - நெற்போர் என்பாரும் உண்டு. இவை
பொருந்தாமையறிக.
போர்களின் மேகம் இளைத்து ஏற என்றது தாழவரும் மேகங்கள்
தங்கக்கூடிய வளவிலே மிக உயர்ந்தனவாக வைக்கோற் போர்கள்
இடப்பட்டன என்க. இன்றைக்கும் மலைபோல நிமிர்ந்து காணக்கூடியபடி
மிகஉயரமாகிய வைக்கோற் போர்கள் இந்நாட்டின் புறங்களிலும்
(இத்திருமங்கல) நகரிலும் காணலாம். இளைத்து ஏறுதல் - மெல்லத் தவழ்தல்.
இலக்கணை. "சோலைகள் மேலோடும், வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ
நன்னாடு" (932) என்றதும் அங்கு உரைப்பவையும் இங்கு வைத்துச் சிந்திக்க.
மேன்மழநாடு - இது நாட்டின் பெயர். மழநாடு - மழவர் என்ற
மரபினர் வாழ்வதும், அம்மரபினரால் அரசு செய்யப் பெற்றதும் ஆகிய நாடு.
இதுமேன் மழநாடு, கீழ் மழநாடு முதலிய பல பிரிவுகளையுடைய
தென்றறியப்படும். திருப்பாசசிலாச் சிராமத்தைத் தலை நகராகக் கொண்டு
கொல்லி மழவன் அரசு புரிந்த நாடும் மழநாட்டின் ஒரு பிரிவு. அது கீழ்
மழநாடு என்பது போலும். கொல்லி மழவனும் அவனது மரபினரும் வழி
வழியாகச் சிவனடிச் சார்புடைய சைவமரபு அரசர்கள் என்பது, "மறிவளருங்
கையார் பாதம் பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினால்"
(திருஞான - புரா - 312) என்றமையாலும், பிறவாற்றாலும் அறியப்படும்.
மழநாடு சோழ நாட்டின் ஒரு பகுதி. மழவ அரசர்களும் சோழ மன்னர்களின்
கீழ் வாழ்ந்த சிற்றரசர்களில் ஒருவராகும் என்ப. கொங்கு மழநாடு என்ற ஒரு
பகுதியும் உண்டு. பிற வரலாறுகள் சரித ஆயாய்ச்சிக் குறிப்பிற் கண்டு
கொள்க.
நீர் நாடு - நீர் வளம் பொருந்திய நாடு என்க. "அலைமலிந்த புனல்"
என்பது முதனூல். அதனை வழி நூலுள் (திருவந்தாதி) "விரிபுனல்" என்றார்.
அதனையே ஆசிரியர் "நீர்" என்றனர்.
நீடு வளத்தது - நீடு முக்காலத்துக்கும் பொதுவாகிய வினைத்தொகை.
இவ்வாக்கின் பயனாக இந்நாளிலும் இந்நாடு நீடும் வளமுடையதாய்
விளங்குதல் கண்கூடு.
சராசரமெல்லாம் சந்த இசைமயமாக்கிய ஆனாய நாயனாரது
சரிதமாதலின் சந்தப்பா யாப்பினால் ஆசிரியர் தொடக்கம் செய்கின்ற நயம்
காண்க. 1 ................