ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label Federation Of Chandravamsa Yadavs (FOCY) - சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு. Show all posts
Showing posts with label Federation Of Chandravamsa Yadavs (FOCY) - சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு. Show all posts
Monday, March 30, 2015
இன்று 306 வது பிறந்த நாள் காணும் செங்கல்பட்டை ஆண்ட மன்னர் திரு.ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ......
11:55 AM
தாமோதரன் கோனார்
Federation Of Chandravamsa Yadavs (FOCY) - சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு
No comments
அவரை பற்றிய வரலாறு கீழே உங்களுக்காக......
(1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.
1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது.
பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.
18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மேற்கூறிய நால்வர் மட்டுமின்றி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். (ஜெயசீலன் ஸ்டீபன் 1999; 32) ஆனால் இவையிரண்டும் இன்னும் வரலாற்றாய்வாளர்களின் பார்வைக்குக் கிட்டவில்லை.
ஆனந்தரங்கம் சென்னையில் உள்ள பெரம்பூரில் பிறந்தார். மூன்று வயதில் தாயை இழந்தார். தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். ஆனந்தரங்கம் தொடக்கத்தில் எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றார். கல்வி கற்ற பின் பாக்குக் கிடங்கினை நடத்தி வந்த ஆனந்தரங்கம் அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இவரது மனைவி செங்கல்பட்டு சேசாத்ரி பிள்ளையின் மகள் மங்கதாயி என்பவராவார். இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர்.
என்ற பெயரில் சொந்தமாகப் பாய்க்கப்பல் ஒன்று இவருக்கிருந்தது. துணி ஏற்றுமதியிலும் இவருக்குப் பங்கிருந்தது. சாராய உற்பத்தி உரிமையும் பெற்றிருந்தார். அதிகாரமும், பொருள் வளமும் ஒரு சேரப் பெற்றிருந்த ஆனந்தரங்கம், அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பாக எழுதி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தாம் கேட்ட செய்திகளை மட்டுமல்லாது அலுவல் நிமித்தமாக அவர் படித்த கடிதங்களையும் கூட தம் நாட்குறிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளார்.
ஜோசப் பிரான்கோயிஸ் துய்ப்ளெக்சு துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747- ல் அப்பணிக்குத் அமர்த்தப்பட்டார். ஆனந்தரங்கம் தமிழில் எழுதிய நாட்குறிப்புகளால் புகழ் பெற்றார். அக்காலத்தில் நாட்குறிப்பினை வைத்து வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் வழக்கம் இல்லை. அவ்வகையில் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பை புதிய தமிழிலக்கிய வகையாகக் கருதலாம். நாட்குறிப்பு இலக்கியத்தை இவர்தான் தொடங்கினார் எனச் சொல்லமுடியாது; ஆனால், முதன்முறையாக இவருடைய நாட்குறிப்புகளே கிடைத்துள்ளன. ஆனந்தரங்கம்பிள்ளைக்கு முன் அவருடைய மாமா குருவப்பப் பிள்ளை தமிழில் நாட்குறிப்பு எழுதியதாக நம்பப்படுகிறது; ஆனால் அது மறைந்து விட்டது.
ஆனந்தரங்கம் பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் நடந்தவற்றை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளார். தம் நாட்குறிப்புகளுக்குத் தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம் (சொஸ்த- தெளிந்த அல்லது உரிமையுடைய, லிகிதம்- கடிதம் அல்லது ஆவணம்) என்றே பெயரிட்டார். இடையில் சில நாட்கள் எழுதப்படாமலும் சில நாட்கள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தைந்து ஆண்டு கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக இது அமைந்துள்ளது. ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் வரலாற்றுச் செய்திகள், அரசியலமைப்பு, நிருவாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்து சென்ற நிகழ்வுகள் போன்ற முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன. எனவே ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள் முற்றுகைகள், கப்பல் போக்குவரத்து, வாணிப நிலை, முகலாய மன்னர் நடத்தை, நவாபின் அத்தாணி மண்டபம், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, வெளிநாட்டார் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், துய்ப்ளேக்ஸ், இலபூர்தோனே, பராதி, இலல்லதொலாந்தால் முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், சோதிடக் குறிப்புக்கள், புலமையளவு முதலிய பலவற்றையும் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தன்னகத்தே கொண்டிருக்கிறது. எளிமையான தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.
ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்புக்களின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளன. துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும். கப்பல் வந்த போது வாணிகம் செழிப்பதும் மக்கள் மகிழ்வதையும் இவர் தமது நாட்குறிப்பில் குறித்துள்ளார். புதுச்சேரிக்குக் கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்ந்தனராம். இதனை
"நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்ததைப் போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போலவும், நீண்ட நாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற்போலவும் தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோசித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது"
என்று தாம் வியந்ததை நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.
நீதி வழங்கல், தண்டனை அளித்தல் ஆகிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. பிரெஞ்சுப் படையிலிருந்து ஓடிப்போன வீரன் ஒருவனைப் பிடித்து அவனைப் பதினைந்து நாள் கிடங்கில் (சிறையில்) வைத்து பின்பு மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் மரண தண்டனை அளிக்கப்பட்டது. வீடுகளில் தொடர்ந்து திருடி வந்த கும்பல் ஒன்றின் தலைவனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்க விட்டனர். ஏனைய இருவருக்கு காதுகளையும் அறுத்து ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன. இவ்வாறு கடுந்தண்டணைகளை வழங்கியதால் குற்றங்கள் குறைந்தன என்பதை ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு தெரிவிக்கிறது.
ஆனந்தரங்கம் தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கஞ் செய்தல், கோவில் திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் எவ்வாறிருந்தன என்பதைப் பதித்துள்ளார். சுங்கு சேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமண ஊர்வலத்தையும், திருமணம் நடைபெற்ற முறையையும், ஆளுநர் அத்திருமணத்துக்கு வந்திருந்ததையும் இவரின் நாட்குறிப்பு மூலமாக அறிய முடிகிறது.
"இந்தக் கலியாணத்திற்கு இற்றை நாள் (9-6-1746) வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்குத் துரையவர்கள், முசே துய்ப்ளே அவர்கள் பெண்சாதியும், மதாம் தெப்ரமேனி, இவர்களெல்லாம் வந்து அரை நாழிகை (12 நிமிடம்) உட்கார்ந்து, பிறகு எழுந்திருந்து வீட்டுக்குள்ளே முதல் கட்டிலே போய் மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்த்துவிட்டு மறுபடியும் பந்தலிலே வந்து உட்கார்ந்து, மேசையிலே உட்கார்ந்து தித்திப்புச் சாப்பிட்டு அரை நாழிகை இருந்து, பிற்பாடு புறப்பட்டு வளவு போய் விட்டார்கள். வருகையிலே 21, உட்காரச்சே 21, சாப்பிடச்சே 21, எழுந்திருக்கச்சே 21 சுட்டார்கள் (பீரங்கி முழக்கம்). துரையவர்கள் வந்தபடியினாலெ வெகுமானப் பணம் துரையவர்களுக்கு ஆயிரம், மதாமுக்கு நூறு அந்தரங்கத்திலே கொடுத்துவிட்டு பந்தலிலே பாக்கு வெத்திலை, பன்னீர், புஷ்பம் மாத்திரம் கொடுத்தார்கள்."
திருமணத்திற்கு வரும் மதிப்பு மிக்கவர்களுக்குத் தரும் வெகுமானம், மரியாதை முதலியன அன்றைய நடைமுறையாக இருந்தது தெரிய வருகிறது.
1748 செப்டம்பரில் புதுச்சேரி நகரை சென்னையிலிருந்து வந்த ஆங்கிலப்படை முற்றுகையிட்டுப் பீரங்கிகளால் தாக்கியது. பீரங்கிக் குண்டுகள் புதுச்சேரியில் மக்கள் வாழும் பகுதியில் விழுந்ததை 1748 செப்டம்பர் 9 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் பின்வருமாறு ஆனந்தரங்கம் பதிவு செய்துள்ளார்.
"மற்றபடி அவன் (இங்கிலீஷ்காரன்) போட்ட தீக்குடுக்கைகள் எல்லாம் நாற்பதுக்கும் உண்டு. அது இப்படி சகல ஜனங்களும் அவஸ்தைப்பட்டார்கள். இந்த தீக்குடுக்கை 1-க்கு சிறிது நூற்றைம்பது ராத்தல் முதல் இருநூத்தி பத்து, பதினைந்து மட்டுக்குமிருக்கிறது. இது வரும்போது ஒரு சோதி போல புறப்படுகிற வேடிக்கையும், அப்பாலே மெள்ள அசைந்து அசைந்து கொண்டு அப்பாலே விழுந்தவுடனே வெடிக்கிற வேடிக்கையும், பார்க்கிறதற்கு ஒரு வேடிக்கையாகத் தானே இருந்தது. இத்தனை தீக்குடுக்கை விழுந்தும் ஒரு மனுஷருக்குச் சேதமில்லை. ஒருத்தருக்கும் காயம் பட்டதுமில்லை. இன்றையத் தினம் இராத்திரி இப்படி நடந்தேறி போனது தீக்குடுக்கையினுடைய மகத்துவம். அதனுடைய சப்தமானதும் இந்த மட்டுக்கும் அது ஒருத்தருக்கும் தெரியாது. இன்றைய தினம் சிறு பெண்கள் பிள்ளைகள் சமஸ்தான பேருக்கும் தெரிய வந்தது. தீக்குடுக்கை பயம், சிறிது பேருக்கு பயம் அரைவாசி தீர்ந்தது. சுட்டதும் ஒரு சப்தம், புறப்படும்போது ஒரு சூரியன் தோன்றுகிறதென்றுவருகிறாப் போலே வருகிறது. வருகிறது வெகு சப்தத்துடனே வருகிறதுமல்லாமல் வெகு தொந்தியுள்ளவன் நடக்க மாட்டாமல் மெள்ள வருவானே அப்படி வருகிறபடியினாலே சமீபத்திலே வரும்போது மனுஷர் தப்பித்துக்கொள்ள விலகிப் போகலாமென்று வெகு பேருக்கெல்லாம் தைரியமுண்டாகி தீக்குடுக்கையென்றால் அதை சட்டை பண்ணி அது வருகிறதோ போகிறதா என்கிறதுகூட கேழ்க்கிறதுகூட விட்டுவிட்டார்கள். இப்படி நடந்ததைப் பார்த்து கேள்விப்பட்டதையும் சுருக்கமாயெழுதினேன். "ஆனாலின்றையதினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்கார்ச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்."
இவ்வாறு சுவையான சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செய்திகள் ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கின்றது. பிற மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலானவற்றையும் அவரது நாட்குறிப்புக்கள் வாயிலாக அறியலாம்.
ஆன்ந்தரங்கம் காலத்திய கர்நாடக மாகாணம்
ஆனந்தரங்கம் இந்திய மன்னர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கினார். 1749 ஆம் ஆண்டு முசபர்சங் என்ற இந்திய மன்னர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி, அவருக்கு மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். பின்பு செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார். ஆளுநருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுவார். அவ்வகையில் ஆனந்தரங்கம் வணிகராக, மொழிபெயர்ப்பாளராக இருந்த போதிலும் மன்னர் போல் மதிக்கப் பெற்றார். ஆளுநர் துய்ப்ளே ஆட்சியில் ஆனந்த ரங்கத்துக்கு தனிப்பட்ட சில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்லும்போது மங்கல ஒலிகள் ஒலிக்கும். அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை இருந்தது. பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது. ஆளுநர் துய்ப்ளேக்சு தன் அரசாங்க விவகாரங்களையும், வீட்டு விவகாரங்களையும் இவரிடம் மனம் விட்டுப் பேசினார். இத்தகைய பல செய்திகள் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.
"ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புக்கள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி"- கே. கே. பிள்ளை.
"தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்." - வ. வே. சு. ஐயர்.
(தமது ‘பால பாரதி’ இதழில்)
ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்
ஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனந்தரங்ககோவை
ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்
கள்வன் நொண்டிச் சிந்து
ஆனந்தரங்கம் பிள்ளைத்தமிழ் - அரிமதி தென்னகன்
ஆனந்தரங்கம் புதினங்கள்
ஆனந்தரங்க விஜயசம்பு -- சீனிவாசர் (வடமொழி நூல்)
ஆனந்தரங்க ராட்சந்தமு - கஸ்தூரிரங்கக் கவி ( தெலுங்கு நூல்)
ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புக்கள் கிடைத்தன. இந்த நாட்குறிப்புக்களை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது 51 ஆம் வயதில் 1761 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 10 ஆம் நாள் மறைந்தார்.
1846 ஆம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய 'அர்மோன்கலுவா மொபார்' என்ற பிரெஞ்சுக்காரரால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்கள் ஆனந்தரங்கம் பிள்ளையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. 1836 இல் நாட்குறிப்பின் மூலப் பிரதியிலிருந்து நகலெடுக்கும் பணியை அவர் செய்து முடித்தார். 'எதுவார் ஆரியேல்' என்ற பிரெஞ்சுக்காரரும் 1849 - 50 களில் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலத்திலிருந்து படியெடுக்கும் பணியைச் செய்து முடித்தார். இந்நகல்கள் இரண்டும் பாரிஸ் நகரிலுள்ள தேசிய நூலகத்தில் உள்ளன. அர்மோன்கலுவா மொபார் முதன் முறையாக எடுத்த நகலிலிருந்து மற்றொரு நகலைத் தயாரிக்கும் பணியை சென்னை ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. 1892 இல் தொடங்கிய இப்பணி 1896 இல் முடிந்தது.
மூல நகலிலிருந்து எடுத்த மூன்றாவது நகலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக சென்னை அரசாங்கம் வெளியிட்டது. 1894 இல் தொடங்கி 1928 வரையிலான கால கட்டத்தில் இத்தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. பின்னர் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. இவற்றிற்கெல்லாம் பின்னரே 1736 செப்டெம்பர் 6 தொடங்கி 1753 செப்டெம்பர் எட்டு வரையிலான காலத்திய நாட்குறிப்புக்கள் எட்டுத் தொகுதிகளாக (ஒன்பது நூல்கள்) பின்வரும் காலகட்டங்களில் தமிழில் வெளியாகின. முதல்தொகுதி (1948), இரண்டாம் தொகுதி (1949), மூன்றாம் தொகுதி (1950), நான்காம் தொகுதி (1951), ஐந்தாம் தொகுதி (1954), ஆறாம் தொகுதி (1956), ஏழு, எட்டாம் தொகுதிகள் (1963). 1755 செப்டம்பர் எட்டாம் நாளுக்குப் பின் தொடங்கி 1764 சனவரி 12 ஆம் நாள் வரை அவர் எழுதிய நாட்குறிப்புக்களில் எஞ்சிய பகுதிகள் இன்னும் தமிழில் வெளிவரவில்லை. தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்பு ஒன்றின் முழுவடிவம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கிடைக்க, தமிழில் எட்டுத் தொகுதிகள் மட்டுமே இன்று வரை வெளியிடப்பட்டுள்ளது. புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மேற்கூறிய எட்டுத் தொகுதிகளையும் எவ்வித மாற்றமுமின்றி நகல் பதிப்பாக மலிவு விலையில் 1998 இல் வெளியிட்டது. இதுவரை அச்சில் வராத எஞ்சிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஆய்வுப் பதிப்பை வெளியிடுவதாக இப்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் இன்று வரை அவை வெளியாகவில்லை.
தாங்கள் இதை பகிர்வதன் மூலம் இந்த தமிழரின் திறமையை பலர் அறிய செய்யலாமே ....பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவிக்கலாமே ....