நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அகில இந்திய யாதவ மகாசபையின் சார்பில் ராமநாதபுரத்தில் யாதவ எழுச்சி மாநாடு தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் யூனியன் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் வீரண்ணன் வரவேற்று பேசினார். மறைந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.செந்தாமரையின் உருவப்படத்தை அகில இந்திய யாதவ மகாசபை தேசிய பொதுச்செயலாளர் சத்யபிரகாஷ் யாதவ் திறந்து வைத்தார். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் சத்யபிரகாஷ் யாதவ் பேசியதாவது:– அகில இந்திய யாதவ மகா சபை அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. யாதவ சமுதாயம் மற்ற சமுதாயத்துடன் ஒப்பிடும்போது பின்தங்காமல் முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் நமது உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். ராணுவத்தில் ஏற்கனவே இருந்த யாதவர் படைப்பிரிவு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். யாதவ சமுதாய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். யாதவ மகா சபை செயல்பாடுகளில் பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். யாதவ இளைஞர் அமைப்பில் பெண்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.வேலைவாய்ப்பு முகாம்
தொடர்ந்து மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:– தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள யாதவ சங்கங்கள் அகில இந்திய சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். ஒரே குடையின்கீழ் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1 கோடி யாதவர்கள் அகில இந்திய சங்க உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். யாதவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேறி நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் உழைக்கவேண்டும். நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் 20 கோடி யாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு செலவு வழங்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் மாநில துணை தலைவர் என்ஜினீயர் கணேச கண்ணன், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், மாநில பொது செயலாளர் நீலமுரளி யாதவ், இளைஞரணி தலைவர் தினேஷ், தேசிய நிர்வாகிகள் நரேஷ், சுவப்பன்குமார், சோம்பிரகாஷ் யாதவ், சுந்தரவதனன், நாசே.ராஜேஷ், முருகானந்தம், பாலகிருஷ்ணன், குணா, பொட்டல்துரை உள்பட பலர் பேசினர்.இடஒதுக்கீடு
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யாதவர்களுக்கு தமிழகத்தில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வீரன் அழகுமுத்து பெயரை சூட்ட வேண்டும். ஜல்லிக்கட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும். ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். ராணுவத்தில் யாதவர் படைப்பிரிவை சேர்க்க வேண்டும். ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். யாதவர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தனித்தொகுதிகளை பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் கணேச கண்ணன் நன்றி கூறினார்.