ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Sunday, January 4, 2015
Monday, December 29, 2014
யாதவர் தொழில் வணிகக் கூடம்
"யாதவர் தொழில் வணிகக் கூடம்" முதல் நிகழ்ச்சி வரும் ஜனவரி 2-ம் தேதி, 2015, மாலை 5.30 மணியளவில், மதுரை அண்ணாமலை ஹோட்டல் நடைபெற இருக்கிறது, சிறப்பு விருந்தினராக சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் "திரு.சோம வள்ளியப்பன்" அவர்கள் "சொல்லாததையும் செய்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதற்கான வேலைகளை தொழில் வணிகக் கூட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் பணியக அலுவலகத்தில் நடந்தது.
தொழில் வணிகக் கூட உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதல் தபால் மூலம் அனுப்பப்பட்டது. யாதவர் தொழில் வணிகக் கூடத்தில் புதிய உறுப்பினராக சேர விருப்பம் உள்ளவர்கள் அன்று நடைபெறும் கூட்டத்தில் பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அனைவரும் தவாறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
02/01/2015, மாலை 5.30 மணி
அண்ணாமலை ஹோட்டல், மதுரையாதவர் தொழில் வணிகக் கூடம், மதுரை மண்டலம்.
தொலைபேசி: 0452 4354343
நன்றி !!
திரு.மருதுபாண்டியன் யாதவ் (தொழில் வணிக கூட அலுவலர்)
Friday, December 26, 2014
திருமூலர்
திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
திருமூல சித்தர்
திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. இவர் திருமூலர் அல்ல. திருமூல சித்தர்.வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை அவை. திருமூலர் திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். பிற்காலத்தில் கலிவிருத்த யாப்பில் தோன்றிய நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர். இப்படி உருவான ஒரு புலவரின் பெயர்தான் திருமூல சித்தர்.
வரலாறு
திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத்திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.
தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில்
தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.
மேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.
சூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.
அந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தியாகிய நங்கை, 'என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே அவர்க்கு என்ன நேர்ந்ததோ' என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள். தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு மாற்றத்தைக் கண்டு 'இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்' என்று எண்ணி அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள். திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். 'உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்' என்று கூறிப்புலம்பி வாட்டமுற்றாள். அந்நிலையில் நிறைதவச்செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி 'நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை' எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.
தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர், திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, 'இது பித்தினால் விளைந்த மயக்கமன்று' பேய் பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களையெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்' எனத் தெளிந்தனர். "இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார். ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்' என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், 'அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
சாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங்கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்றிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளினார். இம்மெய்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவபுரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.
இங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்
- ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
- நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
- வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
- சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே
என்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார்.எல்லாம் வல்ல பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை தம் பாடல் மூலம் விளக்குகிறார்.அப்பாடல் பின் வருமாறு
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரேஅன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
இவ்வாராக தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.
- ”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
- முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
- படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
- அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே”
என்று திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.
திருமூல நாயனார் குருபூசை: ஐப்பசி அசுவதி
திருமூலர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
நூல்கள்
- திருமூலர் காவியம் 8000
- சிற்பநூல் 1000
- சோதிடம் 300
- மாந்திரீகம் 600
- வைத்தியச் சுருக்கம் 200
- சூக்கும ஞானம் 100
- சல்லியம் 1000
- பெருங்காவியம் 1500
- யோக ஞானம் 16
- காவியம் 1000
- தீட்சை விதி 100
- ஆறாதாரம் 64
- கருங்கிடை 600
- கோர்வை விதி 16
- பச்சை நூல் 24
- விதி நூல் 24
- தீட்சை விதி 18
- திருமந்திரம் 3000
முக்கிய சொற்றொடர்கள்ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஆனாய நாயனார்
சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான்திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு , விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.
இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார். சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. தோன்றவே அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார், நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.
மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் – தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால் பாம்பும்,மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும்அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.
ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின்அருகு அணைந்தார்.
நுண்பொருள்
- பூச்சொரியும் கொன்றை சிவ நினைவைப் பெருகுவது.
- ஐந்தெழுத்துள் அனைத்தும் அடக்கம். ஆதலால் ஐந்தெழுத்து இசையமுதம், நிற்பனவும் இயங்குவனமுமான சராசரங்களை எல்லாம் தன்வயப்படுத்த வல்லது.
- ஐந்தெழுத்து மந்திரத்தை வேய்ங்குழலில் இசைத்தல் இசை விரும்பும் இறைவர்க்கு உகப்பானது.
- முன்னின்ற மழ விடைமேல் முதல்வனார் எப்பொழுதும்
- சென்னின்ற மனப்பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க
- இந்நின்ற நிலையேநம் பாலணைவாய் என அவரும்
- அந்நின்ற நிலைபெயர்ப்பார் ஐயர்திரு மங்கணைந்தார் - பெரியபுராணம்
கார்த்திகை அத்தம் குருபூசை அன்றைய நாளில் இறைவனுக்குக் கொன்றைப் பூச் சூட்டுதலும் ஐந்தெழுத்துத் திருப்பதிகங்களை ஓதுவதும் அவற்றை வேய்ங்குழலில் இசைத்துப் பாடுவதும் அழகிதாம்.
Monday, December 22, 2014
2,300 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இரும்புத் தொழிற்சாலைகள்!- கோவை இடையர்பாளையத்தில் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
கோவை மாவட்டம் இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்களில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு சுடுமண் ஊதுகுழல்கள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்போதே அங்கு இரும்பு தொழிற்சாலைகள் இயங்கியது தெரியவந்ததுள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகே இருக்கின்றன இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்கள். இங்கு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பழமையான நெடுங்கல், இரும்பு உருக்க பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஊது குழல்கள், கொங்கு மண்ணுக்கே உரித்தான பல வண்ண வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், குறியீடுகள், சங்கு வளையல்கள், கல் மணிகள், மான் கொம்புகள், சில்லுகள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
ஆய்வு மையத்தை சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி, வே.நாக
ராசு கணேசகுமார், ரவிச்சந்திரன், பொன்னுசாமி, சதாசிவம், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்ட ஆய்வை நடத்தினர். இதுகுறித்து ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பண்டைய தமிழ் சமூகத்தில் இடையர் என்று அழைக்கப்பட்ட முல்லை நில மக்கள் மலைக்கும் வயலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்த்தனர். அவர்கள் பொன்னைவிட தங்களது கால்நடைகளை உயர்வாக கருதியதாக பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
அப்படியான கால்நடைகளை பிறர் கவர்ந்துச் செல்லும்போது அவர்கள் குழுப் போரில் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அப்படி இறந்துபோன வீரர்களுக்காக நெடுங்கற்கள் எழுப்பப்பட்டன. அப்படியான ஒரு நெடுங்கல்தான் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு அடி அகலமும், எட்டு அடி உயரமும் கொண்டுள்ளது. இப்போது இடையர்பாளையத்தில் இடையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிப்பது மேற்கண்ட ஆதாரங்களுக்கு வலு சேர்க்கிறது.
இடையர்பாளையத்துக்கு அருகிலுள்ளது பொன்னாக்கனி கிராமம். இங்கு இரும்பு கசடுகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பெருங்கற்படை பண்பாட்டின் ஓர் அங்கமான கல் வட்டமும், கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலோக கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரும்பு. மனித குல நாகரிக வரலாற்றில் வேட்டை மற்றும் வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்தது இரும்பு.
பழந்தமிழர் இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு தயாரித்தனர் என்று குறுந்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இரும்பை உருக்காக மாற்ற 1,100 சென்டிகிரேட் வெப்பமும் எஃகாக மாற்ற 1,300 சென்டிகிரேட் வெப்பமும் தேவை. அந்த அளவுக்கு உலையில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய பழந்தமிழர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழல்கள் மூலம் காற்றை உலைக்குள் செலுத்தினர். அந்த ஊது குழல்கள், அதன் மூலம் செய்யப்பட்ட இரும்பு கசடுகளும்தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊது குழல்கள் 15 செ.மீட்டர் நீளமும் 6 செ.மீட்டர் விட்டமும் கொண்டவை. இவை சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, அந்த காலகட்டத்திலேயே இங்கு இரும்புத் தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஃபிளினி என்கிற வரலாற்று ஆய்வாளர் தனது ‘நேட்சுரல் ஹிஸ்டரி’ புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் சேர நாட்டிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறார். மேலும், அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மன்னன் புருஷோத்தமன் கொங்கு பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட எஃகுவை கொடையாக கொடுத்தான் என்கிறது வரலாறு. எனவே, எஃகும், வார்ப்பு இரும்பு பொருட்களும் பழந்தமிழர் காலத்திலேயே இங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கு இப்போது கிடைத்துள்ள பொருட்கள் ஆதாரமாக அமைந்துள்ளன” என்றார்.
Monday, September 29, 2014
பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா
இன்று பரமக்குடி அருகில் உள்ள பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த விழாவை மிக சிறப்பாக விழா குழுவினர் செய்திருந்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அங்கு பார்த்து வியந்த செய்தியை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன் ......
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மதுரையில் கோவலன் பத்திரமாக விட்டு செல்லும் இடம் ஆயர்/யாதவர் வீட்டில் என்பதை அனைவரும் அறிவோம், ஏன் என்றால் யாதவர் சமுகம் மட்டுமே ஆடு/மாடுகளை கூட பத்திரமாகவும்/பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள், அதனால் கண்ணகியை நம்மிடமே விட்டு நம் சமூகத்தின் பெருமையை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறேன். அதை இன்று பூவளத்தூர் கிராமத்தில் பார்த்தேன்..... முப்பெரும் விழா மிக சிறப்பாக மந்தையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது ஆனால் ..... இரண்டு பெரியவர்கள் (முத்து யாதவ் மற்றும் மூக்கன் யாதவ்) ஊரின் மையத்தில் உள்ள ஊரணியில் ஊறவைத்து இருந்த கருவ குச்சிகளை கொண்டு, பிறந்து சில நாட்கள் ஆனா குட்டி ஆட்களுக்கு "கூடு" செய்து கொண்டு இருந்தார்கள், விழாவில் கலந்து கொள்ளாமல் ஆடுகளுக்கு இரவு நேரங்களில் எந்த பாதிப்பும் வர கூடாது என்றும் குட்டி ஆடுகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்று "கூடு" செய்கிறார்கள், இதை பார்க்கும் பொழுது சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரை நாம் இன்னும் மாற வில்லை என்பதற்கு இந்த பூவளத்தூர் கிராம மக்களே சாட்சி என்று முப்பெரும் விழா செய்தியாக முடிக்கிறேன் !!!
நன்றி !!!!