பழந்தமிழ் இலக்கியங்களில் தற்போது கிடைக்கும் இலக்கியங்களில் மிகவும்
தொன்மையானது தொல்காப்பியம் என்று கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் சங்க
நூற்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு வரை என்று கருதப்படும் போது தொல்காப்பியம் இதில் கி.மு.
மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்து
நிலைபெற்றிருக்கிறது. இந்த சங்க நூற்களின் காலத்தை இன்னும் முன்னால் கொண்டு
சென்று கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது இப்போது கிடைக்கும்
நூற்களின் காலம் என்ற கருத்தும் இப்போது கேட்கத் தொடங்கியிருக்கிறது.
தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கருத்துகளை விவரிப்பது இந்த இடுகையின்
நோக்கமில்லை. இந்த நூலின் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதற்காக இந்த
கருத்துகளை இங்கே தொட்டுச் செல்கிறேன்.
தொல்காப்பியம் எனும் இலக்கண
நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன.
அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின்
தெய்வங்களையும் குறிக்கிறது.
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே
முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.
இங்கே
மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன்
என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள். பிற்கால இலக்கியங்களில்
எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான் இங்கே மாயோன்
என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும். அப்படியே பிற்கால
இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும் அவன் சிவனின்
மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும் சேயோன் என்பது
முருகனே என்ற பொருளும் பொருந்தும். வேந்தன் என்றால் இந்திரன் தானா?
இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற பொதுப் பொருளைக்
கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும்
பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு
இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும். வருணன் என்பவன் வடமொழி வேதம்
சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு. வடமொழி
வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான்.
இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம்
நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். இங்கே பிற்கால இலக்கியங்கள்
என்று சொன்னது தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கியங்கள்.
அவற்றில் சங்க இலக்கியங்களும் அடக்கம்.
இப்படிப் பொருள் சொல்வதை மறுப்பவர்களும் உண்டு.
***
புறத்திணையியலில்
ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி
விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்
மாயோனின்
நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும்புகழைப் பாடுவதைப்
போல் தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை. மாயோனின் சிறப்பையும்
பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை.
சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும்
புகழையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுவிடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும்
தாவா விழுப்புகழ் என்றும் மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக
இருந்திருக்கிறது என்பது விளங்கும்.
0 comments:
Post a Comment