தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 256வது ஜெயந்தி விழா இன்று (சனிக்கிழமை) அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
விழாவானது, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 12ந் தேதி காலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கட்டாலங்குளம் பகுதியிலும் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் ஜோதி, கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும்,
தூத்துக்குடி மாவட்டத்துக்குள் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும், விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.