"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

ஆயர் குலத்தின் வீர விளையாட்டு ஜல்லிகட்டு-I

 ஜல்லிகட்டு
                கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின்  அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை  அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.  ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த எருது விளையாட்டு பழகிப்போனதுதான் வேடிக்கை.


                அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை  (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால்  ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிஞ்சி நிலத்தவரும் நெய்தல் நிலத்தவரும் ஏறு  தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் பொதுப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. 

                      ஸ்பெயின் உள்ளிட்ட  உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு  அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள். 

                           பறையில் தண்ணுமை முழக்கம் எழுப்பி தொழுவில் அடைபட்ட காளையை திறந்துவிட்டு, மல்லல் மைதானத்தில் காளையர்கள் மோதிப்பிடிப்பது  தான் பொதுவான வழக்கம். ஆனால், தமிழகத்தின் தென், மத்திய மாவட்டங்களில் தான் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் காளையின் கழுத்தில் கயிறு கட்டி இருபுறமும் பலர் நின்று பிடித்துக்கொள்ள அதை அடக்கி கொம்பில் கட்டிய பரிசுப்பணத்தை கவர காளையர்கள் முயல்கின்றனர். 

                      தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீப காலம் வரை கோயில் காளைகளையும் வீட்டில் வளர்க்கும் காளைகளையும் பரிசுப் பொருட்களை கட்டி தெருவில் விடும் வழக்கம் இருந்தது. ஊரார் வழிநெடுக நின்று  அதை அடக்க முயல்வார்கள். ஈழத்து மக்களிடையே பட்டிப்பிடி  விளையாட்டு வழக்கமுள்ளது. இதன்படி பட்டிகளில் அடைக்கப்பட்ட மாடுகளின் கழுத்தில் வடை, பனியாரம் போன்ற உணவுப்பண்டங்களை ஆரமாக  கட்டிவிடுவர். அவற்றை பட்டிக்கு வெளியே கொழுக்கம்புகளுடன் நிற்கும் இளைஞர்கள் இழுத்துக்கொள்கின்றனர். 

வீரத்தை கூட்டும் குரவை கூத்து

அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல  ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.

வீரத்தின் அடையாளம்

            இயற்கை இன்னல்கள், கஷ்ட, நஷ்டங்கள், வறுமை, செழிப்பு என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழ வனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கே பறை சாற்றும் மகத்தான திருநாள் தைப்பொங்கல். தங்கள் நிலங்களில் விளைந்த நெல், கரும்பு, மஞ்சள் போன்றவைகளைகளுடன் புத்தரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கையுடன் சூரியனையும் வழிபடுவது வழக்கம். தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழர்களின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டும் ஆயர் குலத்தின் வீர விளையாட்டு ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு,  வடமாடு விரட்டு போன்ற வீரவிளையாட்டுக்கள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத் தப்படுகிறது. 

ஏறுகோள் (ஆயர் விளையாட்டு)

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்


ஏறுகோள் முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் விளையாட்டு.

ஏறுகோள் விளையாட்டு பற்றிக் கலித்தொகை நூலின் முல்லைக்கலியில் முதல் 6 பாடல்கள் விரிவான செய்திகளைத் தருகின்றன. கலித்தொகைப் பாடல்கள் தொன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.மல்லல் மன்றத்து முரண்தலையில் காளைகளைத் தூண்டிவிட்டு தண்ணுமை முழக்கத்துடன் இது நடைபெற்றதைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. 

           அக்காலத்து மக்கள் இந்த விளையாட்டு விழாவை ஏறுகோள் பாணி ஏறுகோள் சாறு என்றல்லாம் வழங்கினர். ஏறு தழுவும் வீரனைப் பொதுவன் என்பர்   நல்லினத்து ஆயர் பாண்டியன் மரபினர்

கோட்பாடு:

  • காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள்.
  • ஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார் 
  • அடக்கியவனுக்குப் பெண்ணைக் கொடுப்பர் 
  • நல்லினத்து ஆயர் பாண்டியன் மரபினர் கோட்டினத்து ஆயர்  கோவினத்து ஆயர் புல்லினத்து ஆயர்  முதலானோர் ஏறுகோள் விளையாட்டில் ஈடுபட்டனர். இவர்களில் மாற்றினத்துப் பொதுவன் காளையை அடக்கியபோது பெற்றோர் சினம் கொண்டனர். காளை வளர்த்தவள் அடக்கியவனையே விரும்பினாள். ஊர் கூட்டிவைத்தது. 
செய்திகள்:

  • ஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).
  • இந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர். 
  • ஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான் 
  • ஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர் 
  • கோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு. 
  • புண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர். 
  • புண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர்\\
பழக்கம்:
  • பிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர். 
  • காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர் 
  • இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர் 
  • துறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர் 
காளைகள்:
  • சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும் 
  • வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன.
உவமைகள்:

  • போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது. 
  • ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது 
  • பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது 
  • ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது 
  • புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர் 
  • அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது. 
  • இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது. 
  • சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது. 
  • பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான். 
  • கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான். 
  • வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான் 
காளை நிறத்துக்கு உவமைகள்:
கரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம் 
செம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம் 
குரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம் 
புகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள் 
சேய் – சேயோன் போன்ற நிறம்  
அடக்கிய முறை
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள்

வரலாறு:
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்:

சங்க இலக்கியமான கலித்தொகை

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்


என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்:
                        
                       ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள்.இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar