Saturday, August 5, 2017
Home »
» “புலியையே குத்திக் கொன்னதால இந்தப் பேரு!” - வீரத்துக்குப் புகழ்பெற்ற புலிக்குளம் நாட்டு மாடுகள்
“புலியையே குத்திக் கொன்னதால இந்தப் பேரு!” - வீரத்துக்குப் புகழ்பெற்ற புலிக்குளம் நாட்டு மாடுகள்
நாட்டு இன மாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் புலிக்குளம் மாடுகளைப் பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சட்டசபையில் அறிவித்திருப்பது புலிக்குளம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார்கள் புலிக்குளம் கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம். மானாமதுரை- பரமக்குடி செல்லும் சாலையில் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது புலிக்குளம் கிராமம். வானம் பார்த்த பூமி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சீமைக்கருவேலமரங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றது. ஊருக்குள் நுழைந்ததும் கண்மாய் கரை மேல் ஓலை தட்டி போட்டு வெயில் கொடுமை சமாளித்தபடி இருக்கும் வயதானவர்கள்தான் அதிகம்.
அவர்களிடம் புலிக்குளம் மாடு இனம் எப்படி உருவானது அதற்கான பூர்வீகத்தை சொல்லுங்களேன்னு என்றதும் கடகடவென பேச ஆரம்பித்தார் லிங்கம்.
”புலிக்குளம் மாடுகள்தான் வீரமானது. ஓரிஜினல் நாட்டுமாடு. அந்தக்காலத்துல இந்தப் பகுதியெல்லாம் உடம்(கருவேலம்) மரம் சூழ்ந்த பகுதி. அப்ப கண்மாய்ல காட்டு மாடுகள் அதிகமாக இருந்துருக்கு. புலி இந்த மாட்டை வேட்டையாட பாய்ஞ்சிருக்கு. இந்த மாடுகளுக்குக் கொம்பு மான் கொம்பு மாதிரி இருக்கும். கொம்புலேயே குத்தி கொன்னுபுடுச்சுடுச்சு. அதுனாலதான் புலிக்குளம்னு பேரு வந்துச்சுனு எங்க பெரியவங்க சொல்லுவாங்க.
காட்டுமாடுகள் கன்னுகுட்டிகள் ஊருக்குள்ள ஓடி வந்துரும்மாம். அப்படி வந்த மாடுகளைப் பக்குவப்படுத்தி பாட்டுபாடி எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சினைக்கு விட்டுருக்காங்க. அப்படி உருவானதுதான் புலிக்குளம் மாடு. இந்த மாடுகள் இயற்கையாகவே கோபமாக இருக்கும். அதே நேரத்தில் குணமாகவும் இருக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் வகையறா பேரு இருக்கும். பேச்சி வகையறா மாடுனு சேத்தான் வகையறா மாடுனு நாங்க ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சுருவோம். அதே மாதிரி பேரு சொல்லி கூப்பிட்டா எங்க முன்னாடி வந்து நிக்கும். நாங்க மாடு மேய்க்கப் போறோம் . ஒரு கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும் என் துண்டை கம்புகுச்சியில கட்டிட்டு விசில் அடிச்சா போதும். ஆயிரம்மாடா இருந்தாலும் ஒரே இடத்துக்கு வந்துரும். அந்த அளவு குணம் படைத்தது எங்க ஊர்மாடு.
எங்க மாட்டுக்குக் கிழக்கத்தி மாடுனு பெயர் உண்டு. இந்தப் புலிக்குளம் கிராமத்துக்குத் தாய் கிராமம் புத்தூர் கிராமம். புலிக்குளம் பக்கம் மாடுகள் மேய்ச்சலுக்கு வந்தால் பால் அதிகமாக கறந்துச்சு. கன்று தெளிவா இருந்துச்சு. அதான் இங்கேயே குடியேறிவிட்டோம். இந்த மாடு சைவத்தை மட்டுமே சாப்பிடும்.
இந்த மாடுகள் பால் அதிகம் கறக்காது. மிஞ்சி போனால் ஒன்னறை லிட்டர் பால் கொடுக்கும். பால் ருசியாக இருக்கும். உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும். குறிப்பா நோய் வராது. நாங்க குடிக்கிறதுக்கு தயிர் செய்ய மட்டும் பால் கறப்போம். மத்த பாலெல்லாம் கன்னுக்குட்டிதான் குடிக்கும். இந்தப் பாலை வெளியில விற்கக் கூடாது என்பதை கிருஷ்ணபரமாத்மா உத்தரவாக நினைக்கிறோம். எங்களைத்தவிர வேற்று ஆட்கள் யாரவது மாட்டுகிட்ட வந்தாங்கனா ஒரே முட்டா முட்டித் தூக்கி எறிஞ்சுரும். பால் எங்களைத் தவிர வேறு யாராலும் கறக்க முடியாது. நாங்க அதுக்கு ஏத்த மாதிரி தடவிக்கொடுத்து பாட்டுப் பாடினாத்தான் சிவனேனு நிக்கும். இல்லாட்டி கொம்புல நம்ம பதம்பாத்துரும்.
எவ்வளவு பெரிய மழை வெயில் தாங்கும் சக்தி எங்க மாட்டுக்கும் எங்களுக்கும் உண்டு. பகல்ல கட்டிப்போட்டு வளர்க்க முடியாது. காலையில கிளம்பிடும். எங்க ஊர் காசிப்பாண்டிக்கிட்ட மட்டும் ரெண்டாயிரம் மாடு இருக்குது. குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்துலயும் குறைஞ்சது ஐந்நூறு மாடு இருக்கும். இப்ப எங்க ஊர்ல அஞ்சாயிரம் மாடு இருக்கு என்கிறார் பெருமூச்சு விட்டபடி
அதே ஊரைச்சேர்ந்த தேன்மொழி பேசும் போது…
“மழைத் தண்ணி இல்லாததுனால மாட்டைப் பராமரிக்க முடியாமல் வித்துட்டோம். எங்க காலத்தப் போக்குறது இவுங்கதான் . இப்ப எங்க வீட்டு பொம்பளபிள்ளைக்குக் கல்யாணம். பையன்னுக்கு காலேஜ் ஃபீஸ், வீடு கட்ட வட்டிக்கு வாங்குன கடனை அடைக்க இதுயெல்லாத்துக்கும் எங்க மாடுகதான் கைகொடுக்கும் மகாலெட்சுமி. எங்க யாதவர் சமூகத்துல வீட்டப் பாத்து பொண்ணு கொடுக்கல .மாடு எவ்வளவு இருக்குனு பாத்துதான் பொண்ணு கொடுத்தாங்க.
மாடு மேய்க்க ஆள் கிடைக்கல. எங்க பிள்ளைகள் எல்லாம் படிக்கப் போயிருச்சுக. மாடு மேய்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. கூலிக்கு ஆள் பிடிச்சுட்டு வற்றோம். வருசத்துக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கொடுக்குறோம். அவனுக்கு சாப்பாடு காலுக்கு செருப்பு துணிமணி மத்த சவரட்டனை(வசதிகள்) தனி. ஆனால் ஆறுமாசம் கூட கூலி ஆளு இருக்கமாட்டேங்கிறான். கொடுத்தப் பணத்துக்கு பஞ்சாயத்து பண்ண வேண்டி இருக்கு. தினக்கூலினா ஒரு நாளைக்கு ரூ300 கொடுத்து குவாட்டர் பாட்டில் கொடுக்க வேண்டியிருக்கு.
விவசாய நிலங்களில் மாடுகளைக் கொண்டு போய் கிடை போடுவோம். இந்த மாட்டோட சாணி சிறுநீர் ரெண்டுமே நல்ல உரம். அதே நேரத்தில கிருமி நாசினியாகவும் செயல்படுறதுனால பூச்சிக் கடி இல்லாம விவசாயம் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு நாளைக்குக் கிடைபோடனும்னா இவ்வளவுனு பணம் வாங்கிட்டு தான்போடுவோம். இந்த வருமானத்தை வச்சு எங்க பொழப்பு ஓடுது. இராமநாதபுரம் சிவகங்கை திருநெல்வேலி மதுரை விருதுநகர் இந்த மாவட்டங்களில் மட்டும்தான் நாங்க கிடை போடுவோம். வேற மாவட்டங்களுக்குப் போக மாட்டோம். மாட்டுச் சாணிகளைச் சேகரிச்சு வச்சுருந்தா கேரளாக்காரவுங்க ஒரு லாரி இருபதாயிரம் கொடுத்து வாங்கிட்டு போவாங்க.
ஜல்லிக்கட்டுத் தடை வந்ததில் இருந்து எங்க பொழப்பு ரொம்ப கஷ்டமாக போச்சு. இனி மாடுகளை வச்சுருக்குறதுனால புண்ணியமில்லைனு விற்க ஆரம்பிச்சோம். அடிமாட்டை கேரளாவுக்கு அனுப்பிட்டு இருந்தோம். அதுக்கும் மத்திய அரசு தடைனு சொன்னாங்க. சுத்தமாக எங்க குடும்பமே நொடிச்சு போச்சு. அடிமாடுகளைக் கேரளாவுக்கு அனுப்புவோம். ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்புக்கு எங்க கிட்டதான் கன்னுகுட்டி வாங்கிட்டு போவாங்க. முன்னாடி விலை கொறச்சு போச்சு. இப்ப ஜோடி இருபதாயிரத்துக்கு மேல போகுது. எங்க மாடுதான் ஜல்லிக்கட்டுல பார்த்தீங்கனா மண்ணை வாருறதும் கோபத்தோட சீறிப்பாயுறதுமாக இருக்கும். வேற எந்தமாடும் இப்படி இருக்காது என்கிறார் பெருமையோடு.
மாடுமேய்த்து ஓய்ந்த நிலையில் ஓய்வெடுக்கும் பெரியண்ணனிடம் பேசும் போது…
“ஆறு மாசம் மலையும் ஆறுமாசம் விவசாயக்காட்டுலயும் திரிவோம். இப்ப மலையில மாடு மேய்க்க அனுமதி சீட்டு கொடுக்க மாட்டீங்கிறாங்க. அந்த வசதிய அரசாங்கம் செஞ்சு கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும். ஆயிரம் மாடு இருந்தாலும் எந்த வகையறா மாடுனு கண்டுபிடிக்க முடியும். மழை வெயில் பாம்பு பூச்சிகளுக்கிடையே நாங்க உயிரைப் பணையம் வச்சுதான் இந்த மாடுகளோட வாழ்க்கை நடத்துறோம். எங்க மாட்டு கழுத்துல கட்டியிருக்கிற வெங்கல மணி கும்பகோணத்துல இருந்து வாங்கிட்டு வருவோம்.
காங்கேயம், உம்பளாச்சேரி, பர்கூர், ஆலம்பாடி, புலிக்குளம் இவைகள்தான் நாட்டு மாடுகள். இத்தனை மாடுகள் இருந்தாலும் புலிக்குளம் மாடுகள்தான் வீரம் செறிந்த மாடு. இதுதான் ஜல்லிக்கட்டுக்கு உகந்த மாடு. எங்க ஊர்ல அரசு புறம்போக்கு நிலம் இல்லை. ஆனால் எங்க ஊர் விவசாயிகள் ஆராய்ச்சி நிலையத்திற்காக நூறு ஏக்கர் நிலம் கூட தருவதற்கு தயாராக இருக்கிறார்கள்” என்றவர்
”காடு வெளஞ்சு என்ன மச்சான் மாடுவெளஞ்சு என்ன மச்சான் நம்ம கையும் காலும் காஞ்சதுதான் மிச்சம்னு” பாட்டு மூலமாக வறட்சியையும் வளர்ச்சியையும் அழகாக பாடிக்காட்டினார்.
Related Posts:
ಯಾದವ ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳ ಪಟ್ಟಿ 1 . ಚೌಧರಿ ಬ್ರಾಹಮ್ ಪ್ರಕಾಶ್ ಯಾದವ್ ದೆಹಲಿ ಮೊದಲ ಮುಖ್ಯಮಂತ್ರಿ2 . ಪ್ರಫುಲ್ಲಚಂದ್ರ ಘೋಷ್ಪಶ್ಚಿಮ ಬಂಗಾಳ ಮುಖ್ಯಮಂತ್ರಿ3 . Bindheshwari ಪ್ರಸಾದ್ ಮಂಡಲ್ಬಿಹಾರ ಮತ್ತು ಮಧ್ಯಪ್ರದೇಶ ಮಾಜಿ ಮುಖ್ಯಮಂತ್ರಿ4 . Bindheshwari ಪ್ರಸಾದ್ ಮಂಡಲ್ಬಿಹಾರ ಮಾಜಿ… Read More
యాదవ ముఖ్యమంత్రులు జాబితా 1 . చౌదరి బ్రాహం ప్రకాష్ యాదవ్ ఢిల్లీ తొలి ముఖ్యమంత్రి 2 . ప్రఫుల్ల చంద్ర ఘోష్పశ్చిమ బెంగాల్ ముఖ్యమంత్రి 3 . ప్రసాద్ మండల్బీహార్, మధ్యప్రదేశ్ మాజీ ముఖ్యమంత్రి 4 . Bindheshwari ప్రసాద్ మండల్బీహార్… Read More
Yadav's in Literature Karmega Konar (Tamil Poet)IdayKattu Sither (Tamil Poet,Shepherd)Anand Yadav (Marathi writer)Rajendra Yadav (Hindi novelist and Editor of "HANS")Gurram Jashua (Telugu poet)Jai Prakash Shastri(Noted Sanskrit Scholar of North I… Read More
முல்லையின் சிறப்புகள் Normal 0 false false false EN-US X-NONE X-NONE … Read More
யாதவர்கள் உலகில் தோன்றிய மனித இனங்களில் முதன்மையானவர்கள் யாதவர்கள் ஆகும். இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களில் யாதவர்கள் வாழ்கிறார்கள். முதலில் காடுகளில் ஓடிய ஆற்றோரங்களில் வாழத்தொடங்கிய இவர்கள், பின்னர் கா… Read More
Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let's keep on sharing your stuff.
ReplyDeleteTamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News