ஆனந்தரங்கம் பிள்ளை |
Thursday, October 15, 2015
மதுர கவிராயரும் ஆனந்தரங்கம் பிள்ளையும்
அக்காலத்தில் அவருக்கு அந்த உயர்ந்த பதவி கிடைத்தது, குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலாகும். ஏனென்றால், அக்காலத்தில் ஏகபோக உரிமை பிரெஞ்சுக்காரருக்கே இருந்தது. பிரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு சரித்திரத்தில் முதலிடம் பெற்ற இந்தியர் ஆனந்தரங்கம் பிள்ளையே.
ஆனந்தரங்கம் பிள்ளை அருந்தமிழில் பெரும் பற்றும், புலவர்களிடத்தில் பேரன்பும் கொண்டிருந்தார். அவரது பெருங்குணத்தைப் பற்றி மதுர கவிராயர் என்பவர் கேள்விப்பட்டார். மதுர கவிராயரின் தமிழ் உள்ளம், பிள்ளையவர்களைக் காண விரும்பியது. அதனால், அவர் புதுவை நகர் வந்தடைந்தார்.
புதுவையை அடைந்த மதுர கவிராயர், ஆனந்தரங்கம்பிள்ளையின் அழகிய மாளிகையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது பிள்ளையவர்கள் மாளிகையில் இல்லை. மாளிகையில் இருந்தோர், பிள்ளையவர்கள் வயற்புறம் சென்றிருப்பதாகக் கூறினர்.
அதனை அறிந்த கவிராயரும் வயற்புறம் நோக்கிச் சென்றார். சலசல என்று ஓடும் வாய்க்கால் நீரும், அதை எதிர்த்து உடலசைத்துச் சென்ற மீன்களும் கவிராயருக்குக் களிப்பை உண்டாக்கின. வயல்களில் கதிர்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் பயிர்கள் சாய்ந்து கிடந்தன. அவை சாய்ந்து கிடந்தமையால் வயல்கள் மறைப்புண்டு கிடந்தன. சில வயல்களில் விண்ணில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பதைப் போல் செந்நெல் மணிகள் விழுந்து கிடந்தன.
ஆனந்தரங்கம்பிள்ளை அந்நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். மதுரகவிராயர் மெதுவாகச் சென்று அவர் எதிரே அரவமின்றி நின்றார். பிள்ளையவர்கள் தற்செயலாகத் தலை நிமிர்ந்தார். கவிராயரைக் கண்டார்.
அன்பு நிறைந்த முகத்துடன், ""வணக்கம்! அந்த வரப்பின் மேல் உட்காருங்கள் வந்து விடுகிறேன்!'' என்று கூறினார்.
அவர் கூறியபடியே மதுரகவிராயர், புற்கள் நிறைந்திருந்த வரப்பின் மேல் உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு பிள்ளையவர்கள் முன் போலவே நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் வருவார் என்று கருதி அமர்ந்திருந்த கவிராயர், எழுந்திருப்பதும், உட்காருவதும், சிறிது நடப்பதுமாக இருந்தார். அவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் தம்முடைய அவசரத்தை அவருக்கு உணர்த்தினார்.
அதனை அறிந்த பிள்ளையவர்கள் கவிராயரைப் பார்த்து, ""ஏன் பறக்கிறீர்?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட கவிராயரின் முகத்தில் சினக்குறி தோன்றியது. பிள்ளையவர்களின் வார்த்தை கவிராயருக்குக் கடுமையானதாகத் தோன்றியது. கவிராயரின் உள்ளத்தை அவருடைய வார்த்தை சுருக்கென்று சுட்டது.
கவிராயர் உடனே பிள்ளையவர்களைப் பார்த்து, ""கொக்குப் பறக்கும், புறா பறக்கும், குருவி பறக்கும், நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். மக்கள் தலைவனே! நான் ஏன் பறப்பேன்?'' என்று கருத்தமைந்த ஒரு பாடலைப் பதிலாகப் பாடினார்.
ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள் அந்தப் பாடலின் சுவையைச் சுவைத்துக் கொண்டே தம் வீட்டிற்குப் புறப்பட்டார். கவிராயர் முன்னே செல்ல, பிள்ளையவர்கள் பின்னே சென்றார். பிள்ளையவர்கள் மதுரகவியாரைத் தம் மாளிகைக்குள் அழைத்துச் சென்றார். அம்மாளிகையின் மீது பிரெஞ்சுக்கொடி பறந்து கொண்டிருந்தது.
அந்த மாளிகையில் மதுரகவிராயர் களைப்பாறினார். அவருக்கு உணவளிக்க பிள்ளையவர்கள் தலை வாழை இலையை அவர் முன் போட்டர். கவிராயருக்கோ கடும்பசி. பிள்ளையவர்கள் வெள்ளித் தட்டில் பொற்காசுகளைக் கொண்டு வந்து கவிராயர் முன் இருந்த இலையில் வைத்தார். வைத்துவிட்டு, கவிராயரை முகமலர்ச்சியுடன் பார்த்து, ""மதுரகவி பாடும் மதுரகவிராயரே! இதனை மதுரமோடு உண்ணுங்கள்!'' என்று கூறினார்.
அதைக் கேட்ட மதுரகவிராயர் திகைத்தார். பிள்ளையவர்கள், ""கவிராயரே! ஏன் விழிக்கிறீர்? இதனை உண்ணுங்கள். நான் வயலில் உதிர்ந்து கிடந்த நெல்லைப் பொறுக்கினேன். அதனை நீர் அற்பமாக நினைத்தீர். அது நெல்லன்று; பசிப் பிணி மருந்து. அது பசியை ஒழிக்குமா? இந்தப் பொற்காசுகள் பசியை ஒழிக்குமா?'' என்று வேடிக்கையாகக் கேட்டார்.
அதைக்கேட்ட மதுரகவிராயர், ""என்னைப் பசி மிகவும் எரித்தது. அதனால், நான் பசியைப் போக்கிக் கொள்ள உங்களைத் துரிதப்படுத்தினேன்!'' என்று பதில் கூறினார்.
அதைக்கேட்டு பிள்ளையவர்கள் சிரித்தார். கவிராயர் முன் இருந்த இலையை இழுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, அவர் அருகில் அமர்ந்தார். வேலையாள் அவர்கள் இருவருக்கும் இலையிட்டு உணவு பறிமாறினான். இருவரும் இனிது உண்டனர். பிள்ளையவர்கள் அதன் பிறகு அப்பொற்காசுகளை அக்கவிராயருக்கே பரிசாக அளித்துவிட்டார். மதுரகவிராயர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தம் ஊர் திரும்பினார்
0 comments:
Post a Comment