மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்
Friday, November 27, 2015
முல்லைக்கலி – 104வது பாடல்
இப்பாடலில் ஒரு வரலாற்றுச் செய்தி வருகிறது. தமிழகத்தில் பல கடல்கோள்கள் நிகழ்ந்தன. அதனால்தான் ஒல்காப் பெரும்புகழ் கொண்ட தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல செறிவு நிரம்பிய இலக்கியங்கள் அழிந்து விட்டன. தமிழின் தொன்மை ஏறத்தாழ கி.மு. ஐந்தாயிரம் எனக் குறிக்கிறார் முதுபெரும் அறிஞர் முனைவர். ச.வே. சுப்பிரமணியம் அவர்கள். கடல்கோள் நிகழ்ந்ததற்குச் சான்றாக 104 ஆவது முல்லைக்கலிப் பாடல் விளங்குகிறது. அக்கருத்து இதுதான். “தென் மதுரையும் கபாடபுரமும் கடலால் கொள்ளப்பட்ட காரணத்தால் பாண்டிய அரசன் சோழ நாட்டுப் பகுதியையும் பாண்டிய நாட்டுடன்
இணைத்துக் கொள்கிறான். இப்பாடலைப் பாடியவன் இவ்வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்தவன் சோழன் நல்லுருத்திரன். கடலின் மிகுந்த அலைகள் தன் நாட்டினுள் புகுந்து கைக்கொண்டு (பாண்டி நாட்டினுள்) விடுதலால், தன் நாட்டின் பரப்பை பரப்பளவைக் கூட்டவேண்டி மனத்தில் இளைப்பின்றி பகைவரைத் (சேரனையும், சோழனையும்) தன் வலிமையால் வென்று மேலே சென்று சோழனின் புலி இலச்சினையையும், சேரனின் வில் இலச்சினையையும் அழித்து, விளங்கும் மீன் இலச்சினையை அங்கே பொறித்த புகழையுடைய பாண்டியனின் பழைய புகழை நிலைபெறச் செய்த குடியுடன் தோன்றிய முல்லை நிலத்தில் வாழும் ஆயர் (இடையர் குலத்தினர்) என்ற கருத்தில் பாண்டியனின் சிறப்புக் கூறப் படுகிறது.
அப்பாடல் வரிகள்
மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல் வௌவலின்
மெலிவின்றி, மெலிவின்றி மேல் சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்இசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர் ….
எனத் தொடரும் இப்பாடல் 80 வரிகளைக் கொண்டது.
“மலிதிரை ஊர்ந்து தன்மண் கடல்வௌவலின்
………………..
ஒருமொழி கொள்க, இவ்வுலகுடன் எனவே” எனும் வரி முடிய உள்ள இப்பாடல், பல்வேறு செய்திகளை உள்ளடக்கியது.
விளக்கம்
தலைவி ஒருவனை விரும்ப அவன் ஏறு தழுவினான். அக்காட்சியைத் தோழி தலைவிக்குக் காட்டினாள். பின் தலைவியின் சுற்றத்தார் அவனுக்கே தன் மகளை மணம் செய்துதர இசைந்தனர். பொதுவாக முல்லைக்கலிப் பாடல், காளைகளைப் பிடித்து அடக்கும் இளைஞர்களுக்கே தம் மகளை மணம் செய்து கொடுத்து இல்லறம் நடத்த இசைவர் எனும் செய்தியை விளக்குவதாகவே உள்ளது. காடும் காடுசார்ந்த இடம் முல்லை. அதில் ஆயர்குல மக்கள் வாழ்வர். அவர்கள் காளையை வென்ற இளைஞர்களுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுப்பது முல்லை நில ஒழுக்கம். இல்லறத்தில் நிலைபெற்று இருத்தலும், இருத்தல் நிமித்தமும் உரிப்பொருள்.
இப்பாடலில்,
பால்நிற வண்ணன் கண்ணனின் அண்ணன் பலதேவன். அவன் பால் போல் வெண்ணிற மேனியன். நேமித் திருமார்பன் எனப்படும் சக்கரத்தை உடைய திருமால் பிறைநுதல் முக்கண்ணன் எனும் நெற்றிக்கண் உடைய முக்கட் பெருமானாம் சிவ பெருமான் ஏறும் வெள்ளையேறாகிய (ஏறு – காளை) காளையை அடக்கும் முல்லை நில ஆயர்குல வீரன். செட்டிநாட்டில் மஞ்சுவிரட்டுத் தொழு என்பர். இச்சொல், “தொழுவினுள் கொண்ட ஏறு எலாம்” எனத் தொழுவினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காளைகளைக் குறிக்கிறது. மேகத்தை விரட்ட நடத்தப்படும் மாடுகளை ஓடிப்பிடித்து ஏறி அடக்கும் விளையாட்டு மஞ்சுவிரட்டு. அதனை ஜல்லிக்கட்டு என்பர். இவ்விளையாட்டுக்குத் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. முல்லைக்கலிப் பாடல் முழுவதையும் படிக்கச் சுவையாக இருக்கும். படிப்பீர்… சுவைப்பீர்.
0 comments:
Post a Comment