உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்
கட்டப்படுகிறது. இதற்கான பணி முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில்
தொடங்கியது
கிருஷ்ணர் கோவில்
உலகிலேயே உயரமான வழிபாட்டுத்தலமாக உத்தரபிரதேச மாநிலம்
பிருந்தாவனத்தில், ‘பிருந்தாவனம் சந்திரோதய மந்திர்’ என்ற பெயரில்
கிருஷ்ணர் கோவில் ஒன்று உருவாகிறது. 70 அடுக்குகளுடன், 231 மீட்டர்
உயரத்தில் ரூ.300 கோடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.
இந்த கோவில், கிருஷ்ணர் தனது இளம் பருவத்தை கழித்த பிருந்தாவனத்தை நினைவுகூர்வதாக அமையும்.
பணி தொடங்கியது
ஹோலி கொண்டாட்டத்துக்கு இடையே, மாநில முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ்,
மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில், இந்த
கோவில் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த கோவில் 5 ஆண்டுகளில்
கட்டிமுடிக்கப்படும் என ‘இஸ்கான்’ (சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் அமைப்பு)
தெரிவித்தது.
இந்த கோவில் கட்டும் பணியை நேற்று தொடங்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க
தருணம் என அகிலேஷ் யாதவ் பெருமிதப்பட்டார். அப்போது அவர், ‘‘ஹோலி பண்டிகை
கொண்டாடுகிற இந்த தருணத்தில், அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்புவதற்கு
இந்த பணி நமக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியா அதன்
கலாச்சாரத்துக்கு, பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. எண்ணற்ற மதங்களின்
பிறப்பிடமாக இந்தியா அமைந்துள்ளது’’ என கூறினார்.
சிறப்பு அம்சங்கள்
இந்த கோவில் கட்டும் பணிக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த கோவிலின் உச்சியில் நிறுவப்படுகிற டெலஸ்கோப் வழியாக பக்தர்கள் கிருஷ்ண ஜென்ம பூமியையும், தாஜ்மகாலையும் கண்டுகளிக்க முடியும்.
கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் ஹெலிகாப்டர்களில் வந்திறங்க ஏற்ற
விதத்தில் ஹெலிகாப்டர் தளமும் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்குமிடமும்
கட்டப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஆன்மிக விழாக்களுக்கும் இங்கு பஞ்சம்
இருக்காது.