சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.
இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘
பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)
ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:
‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’
என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.
0 comments:
Post a Comment