"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, August 5, 2015

வெள்ளலூர் தனிக்கல்வெட்டு

கொங்கு நாட்டில் பண்டைக்காலத்தில் கால் நடை வளர்ப்பே மேலோங்கியிருந்தது. “ ஆகெழு கொங்கு “ என்பது சங்க இலக்கியம் ஒன்றில் பயில்கின்ற தொடர். மலைப்பகுதியிலும், சமவெளியிலும் கால் நடைகளை மேய்த்து வளர்த்தனர். கொங்குப்பகுதியில் வழங்கும் “பட்டி”, “தொழு” ஆகிய சொற்கள் கால் நடை வளர்ப்பை ஒட்டி எழுந்தவையாகும். சோழர்களின் ஆட்சி கொங்குச்சோழர்களின் மூலம் நடைபெறத்தொடங்கியது முதலே வேளாண்மை முதன்மை பெற்றது. இருப்பினும், கால் நடை வளர்ப்பு என்பது கொங்கு மக்களின் பிரிக்கமுடியா அங்கம். கால் நடை வளர்ப்புக்குப் பொறுப்பேற்றவர்கள் இடையர்கள். “யாதவர்” என வழங்கப்பட்டவர்களும் இவரே. கல்வெட்டுகளில் இவர்கள் “கோன்” , “கோனார்” எனக் குறிக்கப்படுகிறார்கள்.


கோவில்களில், நந்தா விளக்கு எரிக்கவும், அமுதுபடி (நைவேத்தியம்) மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளுக்காகவும் தேவைப்படும் நெய் இந்த இடையர்களிடமிருந்தே பெறப்பட்டது. இது கல்வெட்டுகள் சொல்லும் செய்தி.”சந்தியா தீபம்” என்னும் கோவில் விளக்கு ஒன்றுக்குத் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில் நிவந்தம் அளிக்கப்பட்டது. இதிலிருந்து, கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் இடையர்களின் செல்வாக்கு ஆகியவை பற்றி உணர்ந்துகொள்ளலாம். அத்தகு இடையர்களில் ஒருவர் கோவிலுக்குக் கொடை அளித்த செய்தியைக் கொண்டிருக்கும் கல்வெட்டு ஒன்று கோவை வெள்ளலூரில் இருக்கும் தேனீசுவரர் கோவிலில் கண்டறியப்பட்டுள்ளது.


கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, கரு நிறக்கல்லைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான இதன் உச்சிப்பகுதி மட்டும் ஒரு மைல் கல்லின் வளைவோடு காணப்படுகிறது. இப்பகுதியில், நடுவில் ஒரு நந்தியும், நந்திக்கு மேற்பகுதியில் திரிசூலம் ஒன்றும் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டுள்ளன. நந்திக்கு இடப்புறமும் வலப்புறமும் சூரிய, சந்திரர்களின் புடைப்புருவங்கள். சூரிய, சந்திரர்கள் உள்ளவரையிலும் கோவிலுக்குச் செய்த தன்மம் (கொடை) தடையின்றி நடக்கவேண்டும் என்பதன் குறியீடாகவே சூரிய,சந்திரர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழே பட்டையாக ஒரு புடைப்புச் செதுக்கம். இதன் கீழே பதினாறு வரிகளில் கல்வெட்டு. கல்வெட்டு பிள்ளையார் சுழியுடன் தொடங்குகிறது. முதல் வரியில் “சிவமயம்” என்று உள்ளது.


வெள்ளலூர் மஜார் இடையர்பாளையத்தைச் சேர்ந்த குமரக்கோனான் என்பவரின் மனைவியான(கல்வெட்டு ”பெண்ஜாதி” எனக்கூறுகிறது) மருதக்காள் என்பவர் விசுவநாதர், விசாலாட்சி ஆகிய கடவுளர்களின் சன்னிதிகளை அமைத்து, அறுபத்துமூன்று நாயன்மார் சிலைகளை எழுந்தருளச்செய்து (பிரதிஷ்டை செய்து), நாயன்மாருக்கென மண்டபமும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமன்றி, வெள்ளலூர், சிங்கனூர் ( தற்போதைய சிங்கநல்லூர் கல்வெட்டில் சிங்கனூர் எனக்குறிப்பிடப்படுகிறது ), மற்றும் செட்டிபாளையம் ஆகிய ஊர்களில் இவருக்குப் பாகமாக வந்த நிலங்களையும் கோவிலுக்கே கொடையாக அளித்துள்ளார். இந்த நிலங்களின் மதிப்பு, கொடை வழங்கிய காலத்தில் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு பெறுமானம் உடையதாக இருந்தது.
கல்வெட்டின் காலம் கல்வெட்டின் தொடக்கத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது. அக்கால வழக்கப்படி கலியுக ஆண்டும், சாலிவாகன ஆண்டும் (சக ஆண்டே சாலிவாகன ஆண்டென்றும் வழங்கப்பெறும்) குறிக்கப்படுகின்றன. ஆங்கில ஆண்டான கிறித்து பிறப்புக்கு 3101 ஆண்டுகளுக்கு முன்பே கலியுக ஆண்டுப் பிறப்பு அமைந்துள்ளதால், கல்வெட்டு குறிப்பிடும் கலியுக ஆண்டான 5022-இலிருந்து 3101-ஐக் கழிக்கக் கிடைப்பது கி.பி. 1921 . அதேபோல், சக ஆண்டு, கி.பி. 78-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குவதால், கல்வெட்டு குறிப்பிடும் சக ஆண்டான 1843-உடன் 78-ஐக் கூட்டக் கிடைப்பது கி.பி. 1921. கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் கலியாண்டும், சகவாண்டும் கி.பி. ஆண்டோடு சரியாகப் பொருந்துகிறது. கல்வெட்டில் குறிக்கப்படும் தமிழ் ஆண்டான துன்மதி ஆண்டும் கி.பி. 1921-ஆம் ஆண்டுடன் பொருந்திவருகிறது. சரியாக 11.7.1921 திங்கள் கிழமையன்று இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. காலத்தைத் தெளிவாகக் காட்டும் வகையில் பழைய கல்வெட்டுகளிலும், பத்திரங்களிலும் கலியாண்டும், சகவாண்டும், தமிழ் (அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டம்) ஆண்டும் குறிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
மேற்படி கல்வெட்டின் காலத்தில், வெள்ளலூர், செட்டிபாளையம், சிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் “கோனார்” என்னும் இடையர்கள் மிகுதியும் இருந்தமையும், இக்குலத்தவரில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தமையும், பெண்கள் தம் விருப்பத்துடன் தம் சொத்துக்களை அறச்செயல்களுக்குப் பயன்படுத்தியமையும் கல்வெட்டுச் செய்தியின் வாயிலாக அறிகிறோம். மருதக்காள் போலக் கொடையுள்ளம் கொண்ட செல்வர்கள், தற்போது சிதைவு கண்டு வரும் கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்தால், பழங்கோவில்கள் பல புத்துயிர் பெறும்.
து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

1 comment:

  1. yadava konor , edayar are all well to do people who had donated lot of money gold to god. tirupathy temple keys are with yadava people only they open the temple every day only then other priest and official can enter tirupathy.

    ReplyDelete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar