Friday, April 15, 2016
Home »
» மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...சமூக சிந்தனையாளர் குழு யாம்/YES
மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...சமூக சிந்தனையாளர் குழு யாம்/YES
மீட்டுருவாக்கம்... காலத்தின் கட்டாயம்...
மிகவும் பின்தங்கியவர்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட சட்டநாதன்கமிசனும்(1971), அம்பாசங்கர்கமிசனும்(1983), யாதவர்கள் ஆடு, மாடுகளைப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று மேய்த்து, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்று பரிந்துரைத்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் யாதவர்களின் மொத்த மக்கள் தொகை 13,85,603 எனவும், மூன்றாவது பெரிய சமூகம் எனவும் அன்றே அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் யாதவர் சமுகம் உட்பட 32 சாதிகள் கல்வி மற்றும் வேலையில் பெற்றுள்ள பங்குகள் குறித்த புள்ளிவிபரங்களும் வெளியிட்டுள்ளனர்.
அறிக்கை வெளியாகி 35 ஆண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஒரு அடி கூட முன்னேறாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். இந்த தொழில்நுட்பஉலகில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இன்றி, மொத்த மக்கள்தொகை, வாக்காளர் குறித்த உண்மையான தகவலின்றி தமிழகம் முழுவதும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் நாகரிகமாக வாழ்கிறோம் என்ற அடிப்படையில் நம்முடைய மரபுகளையும் எச்சங்களையும் நம்மையறியாமல் இழந்து, இளம் தலைமுறைகளை வஞ்சித்து வருகிறோம்.
இன்று மிகப் பெரும்பான்மை சமூகமாகத் திகழ்ந்தும் தனிப்பட்ட முறையில் வளமாக வாழ்வதாக நினைத்து வாழ்கிறோமே தவிர, நமக்குள் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள, நம்மை பாதுகாத்து கொள்ள, நமது உரிமைகளைப் பெற நாம் வலுவாகச் செயல்படவில்லை என்பதை நன்கு அறிந்த திராவிட கட்சிகள் 2016 சட்டமன்றத் தேர்தல் வேட்ப்பாளர்களாக மிக குறைந்த எண்ணிக்கையில் அறிவித்து இருக்கின்றன, நாமும் வழக்கம்போல வருத்தப்பட்டு விட்டு நம் வாழ்க்கையை மேய்க்கப் போய் விடுகிறோம்.
ஆனால் நம்முடைய மேய்ப்பராக கருதிக்கொள்பவர்கள், சமூக அக்கறையோடு பல்வேறு தளங்களில் இயங்க, அரசியல் கட்சிகளோடு பேச, பாரம்பரிய தொழில்களை நவீனப்படுத்த, அமைப்புகளை ஒருங்கிணைக்க ஆளுமையற்றவர்களாக இருப்பதால் கால் நூற்றாண்டாக எந்த பணியையும் திறம்பட செய்ய முடியாமல், அரசியல்ரீதியாக அங்கீகாரம் பெறமுடியாமல் மிகப்பெரிய பின்னடைவை நாம் சந்தித்து வருகிறோம். இதற்கு மேய்ப்பர்கள் மட்டும் காரணமில்லை; இந்த வரலாற்றுப் பிழையில் ஒவ்வொரு யாதவனுக்கும் பங்கு உண்டு.
இந்நிலையில் வேறுவழியின்றி உறவுகளை வளமாக வாழ வைக்க வேண்டும் என்று தன்னைப் பணயம் வைத்து இளைஞர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் அவர்களது குடும்பம் பாதுகாப்பற்ற, அரவணைப்பற்ற சூழலில் தள்ளப்படுகிறது, அதைப்போல பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆதிக்க சமூகங்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகளை நம் உறவுகள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது சமூக அமைப்புகளில் ஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றன. ஆனால் சமூக அமைப்புகளோ தங்களுடைய வழக்குகளுக்குள் சிக்கிச் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி நோக்கமே இல்லாத புதிய மேய்ப்பர்களும் அமைப்புகளும் கிளைக்கின்றனர். காலத்தின் அருமை கருதி, சமூக நலன் கருதி விட்டுக்கொடுத்து “குறிக்கோளுடன் கூடிய சமூக அமைப்புகளையும் மேய்ப்பர்களையும் மீட்டுருவாக்கம் செய்வோம்”
நன்றி.
சமூக சிந்தனையாளர் குழு
யாம்/YES
0 comments:
Post a Comment