எல்லா பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே. 1
வானியல் போல் வயங்கும் பிரமமே
சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே. 2
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
சேரா வாகுமே கோனாரே. 3
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே. 4
ஆரண மூலத்தை அன்புட னேபர
மானந்தக் கோலத்தைப் பண்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திரும் கோனாரே. 5
காலா காலங் கடந்திடும் சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே. 6
சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
அந்தகன் கிட்டுமோ கோனாரே. 7
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
நற்பதி சேர்ந்திடும் கோனாரே. 8
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே. 9
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே. 10
0 comments:
Post a Comment