
Thursday, February 26, 2015
Home »
» நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
நெல்லை ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா யாதவ் (வயது 24). இவர் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த அண்ணன்–தம்பியான சக்திவேல், குமார் ஆகியோரும் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பொன்னையா, மாணவ–மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி பாளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு திரும்பி வந்தார். வண்ணார்பேட்டை வடக்குபைபாஸ் ரோட்டில் வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பொன்னையா ஆட்டோவை விட்டு இறங்கவும் அந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பலத்த காயம் அடைந்த பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் தச்சநல்லூரில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் திரண்டு சந்திமறிச்சம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை கல்வீசி தாக்கி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஒரு ஆட்டோவும் தீ வைத்து எரிக்கப்பட்டது. கொலையாளிகள் வசித்த வீடும் கல்வீசி உடைத்து சூறையாடப்பட்டது.
இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

கொலையாளிகளை கைது செய்ய பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரிடம் பொன்னையா கொலை குறித்து தச்சநல்லூர் ஆட்டோ சங்க நிர்வாகி நெல்லையப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இசக்கி என்பவரது மகன்களான சக்திவேல், குமார் என்ற முத்துகுமார், மாரியப்பன் என்ற மாரி, சின்னத்துரை, ஆகிய 4 பேர்களை போலீசார் தேடி வந்தனர்.
கொலை நடந்த இடத்துக்கு சற்று தூரத்தில் அவர்கள் வந்த ஒரு மொபட் அனாதையாக கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.
கொலையாளிகள் பொன்னையாவை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்டு, அவர்கள் தேனீர்குளத்தில் வசித்த வீடுகளை காலி செய்து உக்கிரன்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற சக்திவேல், குமார், மாரி ஆகிய 3பேர்களையும் இன்று கைது செய்தனர். சின்னத்துரையை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது போல ஆட்டோ டிரைவர் பொன்னையா கொலையை கண்டித்து நடந்த மறியல், பஸ்கள் உடைப்பு, ஆட்டோ எரிப்பு, வீடுகள் உடைப்பு தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் மறியல், பஸ்கள் உடைப்பு தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொன்னையாவின் உறவினர்கள் வெங்கடேஷ், ஆனந்த், முருகன், சங்கரநாராயணன், சிதம்பரம், சுப்பிரமணியன், இசக்கியம்மாள், பார்வதி, அங்கம்மாள், ராஜேஷ், மகராஜன், சுடலைமுத்து உள்பட 20 பேர்களை தச்சநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று 2–வது நாளாகவும் தச்சநல்லூர் பகுதியில் பதற்றம் தொடர்கிறது. அங்கு அதிரடிபடை போலீஸ் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு சில கடைகள் இன்றும் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும், மறியலில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட பொன்னையாவின் உடலை வாங்க மறுத்து இன்று 2–வது நாளாகவும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் போலீஸ் உயர்அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment