Monday, July 13, 2015
Home »
சென்னை
» அழகுமுத்துக்கோன் 256-வது நினைவுதினம்: அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி
அழகுமுத்துக்கோன் 256-வது நினைவுதினம்: அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி
அழகுமுத்துக்கோன் நினைவுதினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.அழகுமுத்துக்கோன் நினைவுதினம்
சுதந்திர போராட்டத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வீரமரணம் அடைந்த வீரர் அழகுமுத்துக்கோனின் 256-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அழகுமுத்துக்கோனின் உருவச்சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தி.தேவநாதன் யாதவ், தமிழ்நாடு யாதவ சங்க நிறுவன தலைவர் செ.சரசுமுத்து யாதவ் உள்பட யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.
அரசியல் கட்சிகள்
பா.ஜ.க. சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் பா.ஜ.க.வினரும், பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவபடத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் நினைவஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “சுதந்திர போராட்ட வீரரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவேண்டும். ஆனால் அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தாதற்காக நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறவேண்டும். அழகுமுத்துக்கோனின் நினைவு மண்டபம் சீரமைக்கப்படவேண்டும்” என்றார்.
தள்ளு, முள்ளு
நடிகர் கே.ராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அழகுமுத்துக்கோனுக்கு மரியாதை செலுத்த வருபவர்களுக்கு இடையூறாக இருப்பதால் சிறிது நேரம் வாகன போக்குவரத்தை அனுமதிக்கக்கூடாது என்று கூறி யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், யாதவ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
0 comments:
Post a Comment