வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்தான். வேட்டுவ வாழ்க்கையை மேற்கொண்டு நாடோடி போலத் திரிந்தான். பறவை போன்ற உயிரினங்களோடு போராடியும் வாழ்ந்தான். புன்செய் விவசாயத்தைச் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் புதிய வாழ்விற்குள் தலைப்பட்டான். நன்செய் வேளாண்மையை மேற்கொண்டு நாகரிகத்தைப் படைத்து நகர வாழ்வை உருவாக்கினான். இச்சூழ்நிலையில்தான் பொழுது போக்கிற்காகவும், உடல்வலிமையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் விளையாட்டுக்களை அமைத்துக் கொண்டான். தமிழன் படைத்த விளையாட்டுக்கள் ஒன்று மஞ்சுவிரட்டு என்னும் ஏறு தழுவுதலாகும்.
தொல்பழங்காலம்:-
கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பழங்கால நாகரிகங்களை அமைத்துத் தந்தவர்களுள் எகிப்தியரும் மினோவான் மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய நாகரிகத்தில் மனிதனுக்கும் காளைக்கும் நடக்கும் போர் காணப்படுகிறது. எகிப்தில் உள்ள பெணி-ஹட்சன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் இந்நாகரிகங்களில் இடம் பெற்றுள்ள காளைப்போர் சர்க்கஸ் வித்தைப் போல சித்தரிக்கப்படுகிறது.
அதாவது, காளையின் கொம்பை பிடித்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்து காளையின் முதுகின் மேல் பாய்ந்து, பின்பு அருகிலிருக்கும் துணைவர்களின் கைகளுக்குத் தாவுவர், இவ்வகையான ஏறு தழுவல் வளர்ச்சி அடைந்த கலையாகவே காணப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம்:-
காளை வழிபாடு சிந்து சமவெளி நாகரிகத்தில் சிறப்பிடம் பெற்றதை யாவரும் அறிவர். இதிலிருந்து காளைப்போர் சிந்து சமவெளி மக்களிடையே வழக்கிலிருக்கலாம், என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
வடநாட்டில் பலவிதமான ஏறுதழுவல்கள் நடைபெற்றன என்று சொல்லப்படுகிறது. இரண்டு காளைகளுக்கிடையேனும், காளைக்கும் மற்றொரு விலங்குக்கும் இடையிலேனும் போர் நிகழ்ந்துள்ளது.
சகாங்கீர் காலத்தில் காளைக்கும், புலிக்கும் இடையே போர் நிகழ்த்தி இரசித்திருக்கின்றனர் என்று வரலாற்று நூல்களிலிருந்து அறியலாம். தமிழரின் வாழ்வு முறைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் ஏறுதழுவலைப்பற்றிக் கூறாதது ஆச்சரியமாக உள்ளது.
சங்க இலக்கியங்கள்:-
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் சங்ககாலத் தொகைப் பாடல்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் ஏறுதழுவல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இக்காட்சி மலைபடுகடாமில் சிறிது விரிவாகவே இடம் பெற்றள்ளது. ஆநிரையை விட்டுப் பிரிந்து வந்த காளையும், மலையிலிருந்து வந்த ஏறும், புறங்கொடாத வலிமையொடு புண்பட முட்டுகின்றன. இதனைக் கண்டு கோவலரும் குறிஞ்சி நிலத்தவரும் ஆரவாரிக்கின்றனர் என்று மலைபடுகடாம் விவரிக்கின்றது.
கலித்தொகையில்:-
சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் மட்டும்தான் முதன் முதலில் ஏறுதழுவும் காட்சியைக் காணமுடிகிறது. முதல் ஏழு முல்லைக் கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர தழுவும் காட்சி ஓரங்க நாடகங்களாகக் காட்டப்பெற்றுள்ளது.
ஏறு தழுவலைப் பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் தொழுவத்தில் ஏறுதழுவல் நடைபெறுகிறது. எருமை, ஆடு, பசு ஆகிய மூன்றையும் மேய்க்கும் இடையர்கள் இதில் கலந்து கொள்ளச் செய்கின்றனர். தொழுவத்தின் பக்கத்தில் பரண்மேல் வரிசையாக ஆய மகளிர் நிறுத்தப்படுகின்றனர். இன்ன நிறக் காளையை அடக்குபவன் இன்னவளை மணக்கலாம் என்று அறிவிக்கப்படுகின்றது. காளையை அடக்கியவனுக்குப் பெற்றோர்கள் மகட்கொடை அளிக்கின்றனர். ஏறைத் தழுவி மணந்தவன் முலைவிலை கொடுப்பதிலிருந்து விலக்கப்படுகின்றான். ஏறுதழுவும் விழாவுக்குப் பின் மன்றத்தில் குரவைக்கூத்து ஆடப்படுகிறது. இதில் மன்னன் புகழும் மாயோனின் அருளும் போற்றப்படுகின்றன.
கலித்தொகையில் காளைக்கு உவமையாக...
"கூராஅக் களிற்றுணும் கண்ணஞ்சா ஏற்றை
விடாது நீ கொள்கு வையாயிற் படாஅகை
யீன்றன ஆய்மகள் தோள்"
என்ற வரிகள் காளையின் தோற்றத்தைக் குறிப்பதும், அதனை அடக்கும் கோவலரையும் குறிப்பதாக அமைகின்றன.
சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல்:-
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஏறுதழுவல் பற்றிய காட்சி அமைந்துள்ளது. இவ்வருணணை பெரும்பாலும் முல்லைக்கலியைப் பின்பற்றி அமைந்துள்ளது.
கண்ணகி ஆயர்பாடியில் தங்கியிருந்தபோது மாதரி சிறுமியர் எழுவரை வரவைத்து குரவைக் கூத்து ஆடும்படி பணிக்கின்றாள். அப்போது அவர்கள் ஏழு காளைகள் சிறுவயதிலிருந்து வளர்ப்பது போலவும் உரிய பருவம் வரும்போது அவ்வேற்றை அடக்கும் ஆடவரை மணப்பது போலவும் நடித்துக் குரவைக் கூத்தாடுகின்றனர். இச்செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.
பொருளிலக்கண நூல்களில் ஏறுதழுவல்:-
இடைக்காலப் பொருள் இலக்கண நூல்கள் ஏறுதழுவல் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஐயனாரிதனார் எழுதிய வெண்பாமாலையில் ஒழிபியல் என்னும் பிரிவில் பதினெட்டு வென்றிகளைக் கூறுமிடத்து "ஏறுகோள்" வென்றியையும் ஒன்றாகக் கருதுகின்றனர். நம்பி அகப்பொருள் அகப்பெருந்திணைக்குரிய துறைகளைக் குறிப்பிடும் போது "விடைதாழல்" என்னும் தொடரை மட்டும் தருகின்றது. ஆனால் விளக்கம் தரவில்லை.
கிராமியக் கலைகளில்:-
சோழர், நாயக்கர் காலங்களில் மஞ்சுவிரட்டு கிராமத்தலைமையை உருவாக்கும் கிராமக் கலைகளுள் ஒன்றாக மாறியிருக்க வேண்டும். நிலவுடைமை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தில் நிலக்கிழார்க்கும், ஊரகத் தலைவர்களுக்கும் உள்ள கொளரவத்தையும் சர்வாதிகாரத்தையும் அளிக்கும் ஒரு சமுதாய நிறுவனமாக அது வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தடைவிதிக்கப்பட்டு சிறிது சிறிதாகத் தளர்ந்து வந்ததை அறியலாம்.
இன்றைய வழக்கில் மஞ்சுவிரட்டு:-
கால்நடை பொருளாதாரமும் இணைந்துவிட்ட கிராமியப் பொருளாதாரச் சமுதாயத்தில் "மஞ்சு விரட்டு" என்னும் சல்லிக்கட்டு ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது. ஆண்டு தோறும் தைத்திருநாள் பொங்கலுக்குப் பின் கரிநாளன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
தைப்பொங்கலுக்கு மறுநாள் நடக்கும் மஞ்சு விரட்டு நேர்த்திக் கடனுக்காகக் கட்டப்படும் எருதுக்கட்டு ஓய்வுக்காலத்தில் அல்லது விழாக்காலத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் சல்லிக்கட்டு என்று மூன்று வகையாகப் பிரிக்கும் ஏறுதழுவலை இன்றும் அலங்காநல்லூர் மற்றும் பிற இடங்களிலும் காணலாம்.
இன்று சல்லிக்கட்டு நடத்தும் மரபு தமிழகக் கிராமங்களில் குறைந்து வருகின்றது. இந்த கிராம விளையாட்டை முறைப்படுத்திச் சிறந்த கலையாக மாற்ற வேண்டியது அவசியமாகும். அரசு வழியாகவும், கிராமிய விளையாட்டு மையங்களின் வழியாகவும் இவ்விளையாட்டை உயிர்ப்பிக்க முடியும் என கருதப்படுகிறது.
நன்றி:- வேர்களைத் தேடி