"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, March 13, 2015

இறைவனை கண்டு சொன்ன இடையன்

வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. 

பரசுராமனால் இங்கு வந்த சிவன்:
 ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தன் வீடே திருக்கோயில் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் இவர்களின் வாழ்க்கையில் விதிவிளையாட தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பரசுராமரின் புகழ் உலகமெல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆம், ஒருநாள் ஏதோ ஒருகாரணத்தால் தன் மனைவியின் மேல் கோபம் கொண்டார் ஜமதக்னி முனிவர். தன் மகனை அழைத்து, “நீ உன் தாயின் தலையை வெட்டி எடு.” என்றார். ஒருபக்கம் தாயின் பாசம் மறுபக்கம் தந்தையின் கட்டளை. என்ன செய்வது என்று தெரியவில்லை பரசுராமனுக்கு. “தந்தையே நீங்கள் கூறியதுபோல் என் தாய் ரேணுகாவை கொன்றுவிடுகிறேன். 

ஆனால் மீண்டும் என் தாயை நீங்கள் உயிர்பித்து தரவேண்டும்.” என்றார் பரசுராமர். முனிவரும் தன் மகனின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தார். மகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டார். அதன்படி பரசுராமர் தன்தாயின் தலையை வெட்டினார். பரசுராமர் தன் மகனுக்கு தந்த வாக்குறுதிக்கேற்ப இறந்துகிடந்த ரேணுகாவுக்கு உயிர் தந்தார் ஜமதக்னி முனிவர். ஆனால் முதலில் தாயின் உயிரை எடுத்ததால் பரசுராமருக்கு பிரம்ஹத்தி தோஷம் பிடித்துக்கொள்கிறது. அதில் இருந்துவிடுபட என்ன செய்யவேண்டும்? என்று தன் தந்தையிடம் கேட்டார். “என் மனைவியும் உன் தாயுமான ரேணுகாவின் மீது அர்த்தமற்ற என் கோபத்தால் அவளை கொல்ல சொன்னதால் எனக்கும் பாவமும் தோஷமும் பிடித்து கொண்டது. ஆகவே நாம் இருவரும் பாவ-தோஷத்திலிருந்து விடுபட சிவபெருமானை நினைத்து தவம் செய்ய வேண்டும்.” என்ற கூறி திருநின்றியூருக்கு தந்தையும் மகனும் வந்தார்கள். அங்கு பரசுராமர் ஒரு சிவலிங்கத்தையும், ஜமதக்னி முனிவர் இன்னொரு சிவலிங்கத்தையும் உருவாக்கி அதை பூஜித்து வந்தார்கள். இவர்களின் அன்பான பக்தியை ஏற்ற சிவபெருமான், பரசுராமர் உருவாக்கி பூஜித்த லிங்கத்தில் காட்சி கொடுத்து பரசுராமரின் தோஷத்தை போக்கினார். அந்த சிவலிங்கத்தின் பெயர் பரசுராமலிங்கம். ஜமதக்னி முனிவர் வழிபட்டலிங்கத்திற்கு ஜமதக்னீஸ்வரர் என்று பெயர். 

சிவபெருமான், சிறிய பாண வடிவில் காட்சி தந்து அவரின் பாவத்தையும் போக்கினார். பின்னொரு சமயம் ஸ்ரீமகாலஷ்மி சிவபெருமானை வேண்டி தவம் செய்து வரங்களை பெற்றார். சிவனிடம் வரத்தை பெற்றதால் மகிழ்ச்சியடைந்த மகாலஷ்மி, தன் அண்ணனான சிவபெருமானை எப்போதும் தரிசித்து கொண்டே இருக்க அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தன் மனைவியான ஸ்ரீமகாலஷ்மியை பிரிய விரும்பாத ஸ்ரீமகாவிஷ்ணுவும் இங்கு வந்து விட்டார். திருமகள் இவ்வூரில் தங்கிவிட்டால் “திரு” என்று ஊரின் முதல் எழுத்து உருவானது. இறைவனான சிவபெருமானுக்கு மகாலட்சுமீஸ்வரர் என்ற பெயரும் உண்டானது. 

 கோவில் உருவான கதை:
 சிலந்தியும் யானையும் சண்டையிட்டுக்கொண்டு ஒருகட்டத்தில் சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து யானையை கொன்றாது இப்படி பாவகாரியம் செய்ததால் சிலந்தி மீண்டும் ஒரு பிறவி எடுத்தது. அந்த சிலந்தியே சோழ மன்னரான சுபவேதர்-கமலாவதியின் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்து கோச்செங்கட்சோழன் என்ற பெயரை பெற்றார். முன்ஜென்ம பகையின் காரணமாக யானை நுழைய முடியாத கோயில்களை கட்டியவர் என்று பெயர் பெற்றவர் இவர்.ஒரு சமயம் கோச்செங்கட்சோழன்,இரவு நேரத்தில் மாறுவேடத்தில் தன்நாட்டை சுற்றிப் பார்த்தார். இப்படி போகும் போது ஒரு காட்டுபகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த காட்டு பகுதிக்கு செல்லும் போது காவலர் கையில் இருக்கும் தீவட்டி அணைந்து விடும். மீண்டும் பல முறை எரிக்க முயற்சித்தாலும் அந்த தீவட்டி எரியாது. பிறகு காட்டின் உள்ளே செல்ல செல்ல காட்டின் நடுவழியில் தானாகவே தீவட்டி பிரகாசமாக எரிய ஆரம்பிக்கும். இதுபோல் ஒருமுறை மட்டுமல்ல, பல தடவை இப்படியே நடப்பதால் இந்த காட்டு பகுதியில் ஏதோ ஒரு தெய்வசக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தார் கோச்செங்கட்சோழன். இது தெய்வசக்தியா? அல்லது தீயசக்தியா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது அரசருக்கு. அந்தகாட்டு பகுதியில் பசுக்களை மேய்த்து வந்த ஒரு இடையனிடம், “அந்த காட்டுபகுதியில் ஏதோ சக்தி இருக்கிறது. அது நல்லசக்தியா? தீயசக்தியா? என்பதை அறிந்து சொல். காரணம் பசுவின் கண்களுக்கு தீயசக்தி தெரிந்தால் மீண்டும் அந்த இடத்திற்குள் பசு நுழையாது என்கிறது சாஸ்திரம்” என்றார் அரசர் கோச்செங்கட்சோழன் . ஏதோ தெய்வசக்தி-தீயசக்தி என்கிறாரே அரசர் என்று பயந்துபோன இடையன், தன் துணைக்கு அரண்மனை காவலர்களையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குள் தினமும் சென்று வந்தான். அங்கு நடந்த அதிசயத்தை வந்து அரசருக்கு விவரித்தான். “அரசே இந்த இடத்தில் தெய்வசக்திதான் நிறைந்து இருக்கிறது. என் பசுமாடு தினமும் ஒர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தாமாகவே பால் சொரிகிறது” என்றான். அவன் சொல்வது உண்மைதான் என்றார்கள் அரண்மனை காவலர்கள். உடனே அரசரே இடையன் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தார். ஒரு இடத்தில் அரசரின் கால்தடுமாறி விழுந்தார். “இந்த இடத்தை தோண்டுங்கள்.” என்று உத்தரவிட்டார் கோச்செங்கட்சோழன்.பலமாக அந்த இடத்தை கோடாரியால் தோண்டியபோது அந்த இடத்தில் இருந்து ரத்தம் வெளியே வந்தது. இதைகண்ட அரசர் திடுக்கிட்டார். இருந்தாலும் சிவபக்தரான மன்னர் கோச்செங்கட்சோழன், சிவபெருமானை வேண்டி தைரியமாக தன் வெறும் கைகளாலேயே அந்த இடத்தை தோண்டி பார்த்தார். அப்போது ஒரு சுயம்பு லிங்கம் வெளிப்பட்டது. “ஓம் நமசிவாய” என்று ஆனந்த கண்ணீருடன் தந்த சுயம்பு லிங்கத்தை கட்டி தழுவினார் அரசர். அது ஒரு காட்டுபகுதியாக இருந்தாலும் இறைவனுக்காக அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். இன்றுவரை மூலவர் சுயம்புலிங்கத்தின் மீது கோடாரிபட்ட வெட்டு பள்ளமாக சிவலிங்கத்தில் இருக்கிறது. 

இந்த கோயிலில் என்ன பரிகார சிறப்பு? 
இந்த ஆலயத்தில் உள்ள நவகிரக சந்நிதியில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்ப்பதாகவும், அதனால் இங்கு வந்து அவர்களை வணங்கினால் பித்துருதோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம். “மகாலட்சுமிபுரீஸ்வரரையும் அன்னை உலகநாயகியையும் வணங்கினால் சகல தோஷங்களும் விலகும். ஸ்ரீமகாலஷமி தவம் செய்த இடமான இந்த இடத்தில் வந்து வணங்கினால் அஷ்டஐஸ்வர்யங்கள் பரிபூரணமாக கிடைக்கும். இதைதான் திருஞானசம்பந்தரும் சொல்லி இருக்கிறார். இந்த திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பயம், பாவம், நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்.

Reference :http://bhakthiplanet.com/2011/08/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9-2/

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar