Saturday, July 29, 2017
Home »
» இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்-முனைவர் கே.கருணாகரப்பாண்டின்வரலாற்று ஆய்வாளர்
இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்-முனைவர் கே.கருணாகரப்பாண்டின்வரலாற்று ஆய்வாளர்
கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து காலப் போக்கில் இளைய தலைமுறைக்கு ஏதும் தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, அந்த மாவீரன் பற்றி 'வம்ச மணி தீபிகை' என்ற பழம்பெரும் வரலாற்று நுால் எடுத்துக் கூறியுள்ளது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, 'சுதந்திர வீரன் அழகுமுத்துயாதவ்' என்ற புத்தகத்தின் வழியாக முதல் முதலில் வெளிக்கொணர்ந்தார்.
தளபதி அழகுமுத்து கோன் :'வம்ச மணி தீபிகை' புத்தகத்தின் கூற்றுப்படி, அழகுமுத்து கோனுக்கு 'சேர்வைக்காரன்' என்ற பட்டம் உண்டு. 'சேர்வைக்காரன்' என்பது எட்டையபுரம் மன்னரின் படையின் முக்கிய தளபதிகளுக்கு கொடுக்கும் சிறப்பு பட்டம். மதுரையிலிருந்து அழகப்பன் சேர்வைக்காரன் (அழகுமுத்து கோன்), தன் உற்றார், உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதுார் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டையபுரம் சென்றார். எட்டையபுரத்தை ஆண்ட மன்னர் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர், அழகுமுத்து கோனை எட்டையபுரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார்.
ஒடுங்கிய எதிரிகள் :அழகுமுத்து கோன், அவருடன் வந்த வீரர்கள் குடியேற வசதியாக எட்டையபுரம் மன்னரால் கட்டாளங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 500 பொன் வருமானம் உள்ள சோழாபுரம், வாலாம்பட்டி, மார்த்தாண்டம்பட்டி ஆகிய கிராமங்களும் கொடுக்கப்பட்டன. அழகுமுத்து கோன் சிறந்த போர் திறமையுள்ள வீரனாகவும் எட்டப்ப மன்னருக்கு நேர்மையுடன் கூடிய சேர்வைக்காரனாகவும் பணியாற்றினார்.
எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மன்னருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய கூட்டத்தில் இளவரசர் குமார எட்டு, அமைச்சர் ராமநாதபிள்ளை, அழகுமுத்து கோன், குமார அழகுமுத்து போன்றோர் இருந்தனர். 'ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?' என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.
போர் முரசு ஒலித்தது :கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான். வீரன் அழகுமுத்து கோன், எட்டப்ப மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து மன்னர் எட்டப்பர் படைக்கு ஆள் சேர்த்தார். மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்க வைத்தார். மறுநாள் மாவேலியோடை என்ற இடத்திற்கு அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர். எட்டையபுரத்தை முற்றுகையிட்ட கான்சாகிப், அங்கு யாரும் இல்லாததால் எட்டப்பன் வழிவந்த குருமலைத்துரை என்பவரை மன்னராக எட்டையபுரத்திற்கு நியமித்தான்.
தனது பலமிக்க பெரும் படையை ஏவி பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான் கான்சாகிப். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை 'சேர்வைக்காரர் சண்டை கும்மி' என்ற பாடல் சொல்கிறது.
''கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதி சூரரும்வெங்கல கைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும்மாண்டுவிட்டான்''என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.அழகுமுத்து கோன் கைது இந்த கடுமையான குழப்பத்தில் சிக்கி மன்னர் படைகள் சிதறுண்டன. அழகுமுத்து கோன், அவனோடு இணைந்து கும்பினி படையை எதிர்த்தவர்களையும் கைது செய்தான் கான்சாகிப். கும்பினி படையை எதிர்த்ததற்காக எட்டப்ப மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகளை வெட்டினான் கான்சாகிப்.
கும்பினி படைக்கு எதிராக மக்கள் செயல்பட முக்கிய காரண கர்த்தாக்களான அழகுமுத்து கோன் உட்பட நால்வரை நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்று, பீரங்கியின் வாயில் அனைவரையும் கட்டி வைத்து பீரங்கியால் சுட்டபோது, இவர்களின் உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ்சேர்வை யாதவ், 'முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்' என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
கி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் ஆவணி 1ம் தேதி கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கள ஆய்வின் போது கட்டாளங்குளம் ஓய்வு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.
கட்டாளங்குளத்தில் தடயங்கள் கள ஆய்வின்போது சிதிலமடைந்து இருக்கும் அழகுமுத்து கோன் அரண்மனை, அழகுமுத்து கோன் பயன்படுத்திய மூன்று வாள், ஒரு குத்து விளக்கு, சிதைந்த நிலையில் உள்ள ஒரு வெண்கொற்றக்குடை, வாரிசுகளில் ஒருவரான துரைசாமி யாதவ் வரைந்த அழகுமுத்து கோன் ஓவியம் மட்டுமே எஞ்சிய தடயங்களாக உள்ளன. இவைகளை கட்டாளங்குளம் ராமச்சந்திரன் பாதுகாத்து வருகிறார்.
தமிழக அரசு, வீரன் அழகுமுத்து கோனுக்கு அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. கட்டாளங்குளத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அழகுமுத்துக்கோன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள், கும்மிப்பாடல்கள் போன்றவை காலமும், கரையானும் அழித்து விடும் முன் பாதுகாக்கப்பட வேண்டும்.
- முனைவர் கே.கருணாகரப்பாண்டியன்வரலாற்று ஆய்வாளர்மதுரை. 98421 64097
0 comments:
Post a Comment