Tuesday, July 11, 2017
Home »
அழகு முத்துக்கோன்
» அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினத்தையொட்டி நடந்த குருபூஜை விழாவில், ‘‘விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்’’, என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குருபூஜை விழா
சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு குருபூஜை விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு, அமைப்பின் நிறுவனர்–தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.குணசீலன், தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவருடன் இல.கணேசன், கரு.நாகராஜன், சென்னை சி.ராஜா உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தேசிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குருபூஜையையொட்டி, அழகு முத்துக்கோன் உருவசிலைக்கு மலர் மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீர முழக்கமும், விடுதலையை பேணிக்காப்போம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறு
இதனைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, இன்றுவரை அதன் மகத்துவத்தை போற்றும் தேசம் இந்தியா தான். விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து, சிறை சென்று, தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகள் பலர் உள்ளனர். தமிழகத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்று, பீரங்கி முனையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது வீரத்தையும், உயிர் தியாகத்தையும் என்றும் நம்மால் மறக்க முடியாது.
இதேபோல விடுதலைக்காக வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் உள்பட ஏராளமான வீரர்கள் விடுதலைக்காக தமது உயிரை கொடுத்து உள்ளனர். இவர்களின் தியாகத்தை நாம் என்றென்றும் எண்ணி போற்றவேண்டும். விடுதலை போராட்ட வீரர்களில் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். அதனை படிக்கும் குழந்தைகள் வாயிலாக விடுதலையின் பெருமை பேசப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பெயர் சூட்டவேண்டும்
தேவநாதன் யாதவ் கூறுகையில், ‘‘விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் யாதவர் இனத்தின் குலவிளக்காக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, அழகுமுத்துக்கோன் பெயர் சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவல்லிக்கேணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்கவேண்டும்’’, என்றார்.
கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறுகையில், ‘‘டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கோ அல்லது திருச்சி விமான நிலையத்துக்கோ அழகுமுத்துக்கோன் பெயர் சூட்டவேண்டும்’’, என்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
0 comments:
Post a Comment