Tuesday, June 10, 2014
Home »
» மாயோன்
மாயோன்
மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான். பிற்பாடு இம்மாயோனை திருமால் என மாற்றியதாக ஆய்வாளர்கள் கூறுவர்
திருமுருகாற்றுப்படையில் முருகன் மாயோனின் மருமகனாகக் கூறப்படுகிறான்
கம்ப இராமாயனம் மாயோனை விஷ்னு எனக்கூறுகிறது
மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரி யோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை.
முல்லைநிலத்திற்குரிய கலுழனை(கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்..
மாயோன் பற்றிய குறிப்புகள் பிற தெய்வங்களைவிட மிகுதியாகப் பழந்தமிழ் நூல்களில் பரவிக் கிடக்கின்றன. ”தேயா விழுப்புகழ்த் தெய்வமாக” (கலி:103:76)
மாயோன் என்ற சொல் கரியநிறமுடையவன் என்ற பொருளைத் தருகின்றது. மணிவரை அன்ன மாஅயோனே (புறம்.229) மண்ணுறுதிருமணி (புறம். 56:5) நீலநிற உறவின் நெடியோன் (பெரும். 30.402) இருள் மயங்கும் மேனியன் (பரி.15:50) என இயற்கையுருவாக மாயோன் குறிப்பிடப்படுகின்றான்.
காய்மலர்ப் பூவை கடலை யிருண்மணி
அவையைந்து முறழு மணிகிளர் மேனியை (பரி.13:42-43)
எனக் காயாம்பூ, கடல், நீலமணி என இயற்கையின் உரு, கடவுளாகச் சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றது.
பெரிய எனும் பொருண்மை உடைய மாஅல் என்னும் பெயரும் மாயோனுக்கு உரியதாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரக் காண்கிறோம். முல்லை நிலக்காடுறைப் பகுதியின் நெடிய உருவினை மாயோனுக்கு ஏற்றி மாலாகக் கொள்ளும் முறையினைப் பத்துப்பாட்டின் பல இடங்களில் காணமுடிகிறது.
”மால்வரை நிவந்த சேணுயர் வெற்பு” (முருகு.12) ”மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்” (நற்.32:1) என நெடியோனாக மாஅல் உயருகின்றான்.
அகன் ஐந்திணைக்கு உரிய நிலத்தினைக் கூறுமிடத்துத் தொல்காப்பியர், மாயோன் மேய காடுறை உலகமும் எனச்சுட்டுகிறார். காடுறை கடவுளாகச் சுட்டப்படும் மாயோன் காயம்பூ சூடினமையை, ”பூவை விரிமலர் புரையும் மேனியை” (பரி.1:6-7) ”பறவாப் பூவை பூவினோயே” (பரி.3:73) என்ற தொடர்கள் வெளிப்படுத்துகின்றன.
காடுறை கடவுளான திருமால் கானகத்தின் நெடுமையையும் மாமை நிறத்தினையும் உடையோனாய் இருப்பதோடு அந்நிலத்திற்கு உரிய பெரும்பொழுதான கார்காலத்துக் கரிய மேகத்தின் நிறத்தினைப் பெற்று, காயாம்பூ சூடி முல்லை நிலக்கடவுளாக விளங்குவதனை உணர முடிகின்றது. இதனைத் ”தங்கள் கண்ணுக்குப் பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினர்” (திரு.வி.க. தமிழ்நூல்களில் பௌத்தம், ப.27) என்ற கருத்து அரண் செய்கிறது.
இவ்வாறு மாயோன் அடர் கானகப் பசுமையின் இயற்கையழகில் முகிழ்த்த முல்லைக் கடவுளாக எழிலுறுகிறான் எனலாம்.
முல்லை நிலக் கடவுளாகிய மாயோனை, முல்லைநிலத் தலைவனோடு இயைத்தும் பாடும் மரபு பழந்தமிழில் பரந்து கிடக்கக் காணலாம்.
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மாஅல் போல
புன்தலை மடப்பிடி உண்இயர் அம்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றிநனைகவுள்
படி நிமிறு கடியும் களிறே தோழி (அகம். 59:5-10)
என ஆற்றியிருக்கும் தலைவிக்குத் தோழி தலைவன் செல்லும் வழியிடைக் காட்சி ஒன்றினைக் கூறி ஆற்றுவிக்கின்றாள். இக்கவிதையில் மால் களிறுக்கு உவமையாகி முல்லை நிலத் தலைவனுக்கு இறைச்சிப்பொருளாய்ச் சுட்டப்படுவது இன்றியமையாத குறிப்பாகும்.
எருதின் மீது பாயும் தலைவனுக்கு மால் ஒப்பாவான் என்றும் (கலி.104:35-38) தலைவனைப் பிரிந்திருந்த தலைவி தலைவனை அடைவது மாயோன் மார்பில் உள்ள திருமகளை ஒக்கும் (கலி.109:17-18) என்றும் கலித்தொகை குறிப்பிடுகின்றது.
மாயோன்: பூவை நிலையின் வெற்றி வீரன்:-
பூவை நிலைத் துறையின் புகழ்நிலைக்கு உரிய கடவுளாகிய மாயோன் வெற்றி வீரனாகின்ற தலைவனுக்கு உவமையாகின்றான்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனைப் போற்றும் முகத்தான், ”புகழ் ஓத்தீயே, இகழுநர் அடுநனை” (புறம். 56:13) என மாயோன் உவமிக்கப்படுகின்றான். பிறிதோரிடத்தில்,
புகழ்தலுற்றோர்க்கு மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான்மாறா (புறம்.57:1-3)
என மன்னனது சிறப்பிற்கு மாயோனது சிறப்பு உவமையாகின்றது. இவ்வாறு முல்லை நிலத்தாரின் அகவாழ்விற்கும் புறத்திணை வீரர்களின் (அரசர்களின்) புகழுக்கும் மால் உவமையாக்கப்படுவது எண்ணத்தக்கதாகும். இயற்கையின் மூலபடிவ உருவினனான மாயோன் மாந்தர்தம் வாழ்வியல் கூறுகள் வழி மூலபடிவபாத்திரமாக (Archetypal Charecter) உயர்ந்தமை இன்றியமையாக் குறிப்பாகும்.
மாயோன்: காத்தல் கடவுள்:-
இயற்கையின் உருவாகிய மாயோன் பற்றி குறிப்புகள், கதைத்தன்மையுடன் இணைந்து வளர்ச்சியுற்ற நிலையில் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. காலத்தால் பிற்பட்ட இலக்கியங்களில் அவை புராணிகத் தன்மை மிக்கிருக்கும் பான்மையில் இடம் பெறுகின்றன.
பரிபாடலில் மாயோன் முத்தொழில் புரிபவனாக முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழில் எனப் படைப்பு, அளிப்பு, அழிப்பு, என்னும் தொழில் புரிபவனாக உள்ளான் (பரி.3.71) முத்தொழில் வல்லவனாக மாயோன் இருப்பினும் காத்தல் தொழில் மாயோனுக்கு உரியதாகச் சுட்டப்படுகின்றது. ”உலகாள் மன்னவ” (பரி 3.85) என்னும் ”ஒருமை வினைமேவு உள்ளத்தினை” (பரி.13.49) என்றும் மாயோனின் காத்தல் தொழில் சுட்டப்படுகிறது. காத்தல் கடவுளாக விளக்கமுற்ற மால் உலக முதல்வனாகப் பேருரு கொண்டமையினையும் பழந்தமிழ் வழி அறிய முடிகின்றது.
மாயோன்: உலக முதல்வன்:-
மாயோனாகிய திருமாலின் முழுமுதற்றன்மையினையும் அவதாரங்களையும் ஆற்றலுடைய முழுமுதற்கடவுளாக உயர்ந்தமையையும் பரிபாடல் குறிப்பிடுகின்றது. இக்குறிப்புகள் வடமொழிப் புராணமரபுடன் இணைந்து செழித்தவை என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
திருமால் அனைத்துக் கடவுளாக உள்ளமையை, ”எவ்வயினோயும் நீயே” (பரி.4:67-70) என்ற தொடர் சுட்டுகின்றது. பலராமன், காமன், அநிருத்தன், பிரமன் என ஐவராகவும் மாயோன் உள்ளமையும் பரிபாடலில் (பரி 3.81-94) குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான குறிப்புகள் வைணவப் பஞ்சராத்திரக் கொள்கையின் வளர்ச்சி என்பர் திறனாய்வாளர் (இந்திரபவாநி, சங்க நூல்களில் கிருஷ்ண வழிபாடு, ப.62)
இயற்கையின் உருவாகிய மால் நெடியோனாகி, பேருரு பெற்று கடவுளானமையும், வடமொழிப் புராணக்கலப்பால் கதைத் தன்மையுடன் கூடி வளர்ச்சியுற்றமையையும் கண்டோம். தத்துவப் பொருளாகிய நெடியோன் இயற்கையின் எல்லாப் பொருளிலும் பரந்து விரிந்து ஊடுருவிய நிலையினையும் பரிபாடலில் பரக்கக் காணலாம்.
மாயோன் அவதாரங்கள்:-
அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். அவ்வாறு இறங்குதல் உயிர்களின் பொருட்டு என்றும் கூறுவர். அவதாரம் என்பதற்குத் தோற்றம் என்ற சொல்லாட்சி கையாளப்படுகின்றது. மால் எடுத்த தோற்றங்கள் பத்தென்பர். அவற்றுள் கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருட்டிணன் என எட்டுத் தோற்றங்கள் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர பழந்தமிழில் தொன்மை வகைமை வளர்ச்சி, பி.எச்டி ஆய்வேடு, ப.169)
மாயோன் தொன்மம்: வளர்ச்சியும் சுழற்சியும்:-
மாயோன் தொன்மம் வளர்ச்சி பெற்றுச் சுழற்சி பெற்றமையை அறியலாம்.
இயற்கையின் அடர் பசுமை, கானகத்தின் பரிதி நுழையாத அடர் இருள் முதலிய மூலபடிவு எண்ணங்களுக்கு மாயோன் வித்தாகின்றான். அடர் கானகத்தின் பெரிய பரப்பிற்கும், நெடிய சார்பாக நெடியோனாகக் காடுறை கடவுளாக உயருகின்றான். காடுரை மக்களின் அகவாழ்வாம் காதல் வெற்றிபெற வழியாகும் ஏறு தழுவும் தலைவனாய்ப் பழந்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நனவிலி மனவுணர்வுகளின் உருவாகக் காட்சியளிக்கத் தொடங்குகின்றான். அரசர்களின் புகழுக்கும் படிமமாகி. பூவை நிலை எனும் புறப்பொருளில் மையமிடுகின்றான்.
வடமொழிப் புராணக் கலப்புற்று வளர்ச்சி பெற்ற தொன்மக் கடவுளாகப் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றான். மணிதிகழ் உருபின் மாயோன், மூவேழ், உலகமாய்ப் பரந்தமையும் பிறவாப் பிறப்பாகவும் சிறந்து உலக முதல்வனாகின்றான். விட்டுணுவின் தசாவதாரங்களுள் பல தோற்றங்களின் வடிவாகின்றான். சமய தத்துவச் சார்பின் பொருண்மையாகின்றான். இவ்வாறு மாயோன் தொன்மம் பிறமொழி மற்றும் பண்பாட்டுக் கலப்பால் வளர்ச்சியுற்ற நிலையை உணர முடிகின்றது.
நன்றி: ஆய்வுக்கோவை.
Related Posts:
veeran alagumuthu kone songs Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs Veeran azhgumuthu kone Download Songs1 Veeran azhgumuthu kone Download Song2 Veeran azhgumuthu kone Download Song3 Veeran azhgumuthu kone Download Song4 Gurusamy Y… Read More
telugu yadav sadar songs Download Telugu Yadav Songs Download … Read More
பெருமாள் தேவன்பட்டி ‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்த… Read More
Veeran Azhgumuthu Kone tamil Song Free Download Indian First Freedom First Freedom Veeran Azhgumuthu kone Songs Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs Veeran azhgumuthu kone Download Songs1 Veeran azhgumuthu kone Download Song2 Veeran azhgumuthu kone… Read More
விழுப்புரம் மாவட்டம் செல்லம்பட்டு கிராமத்தில் சத்ரபதி சிவாஜி யாதவ் நற்பணி மன்றம் விழுப்புரம் மாவட்டம் செல்லம்பட்டு கிராமத்தில் சத்ரபதி சிவாஜி யாதவ் நற்பணி மன்றம் தொடக்க விழா புகைப்படங்கள் via: Navaneetha Krishnan Yadav … Read More
0 comments:
Post a Comment