"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, July 2, 2014

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

 இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.
கிருஷ்ணனின் காலகட்டம்:
கிருஷ்ணன் பிறந்து சற்றேறக்குறைய 5200 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். கண்ணன் எப்படி வாழ்ந்தான் என்பதைப்பற்றி அறிவது மட்டுமல்லாமல், கண்ணனுடைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுவும் முக்கியம். அதற்காகவே இந்தியா முழுவதும் கண்ணனை மையப்படுத்திக் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியின் முக்கியநோக்கமே கண்ணன் எப்படி என்றென்றைக்குமான ஒரு ஆளுமையாக இருக்கிறான் என்பதை உணர்த்துவதே. இந்த கண்காட்சியின் பெயர் The Glorious World of Kanna – கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம். இந்தக் கண்காட்சியில் கண்ணன் பிறந்து வளர்ந்த இடமான கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்கள், அங்கு நடைபெற்ற அகழ்வாய்ச்சிகள், அப்போது கிடைத்த அரிய தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அதன் மூலம் கண்ணனின் காலத்தைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிரேக்கர்கள் கண்ணனை வழிபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவை மிகவும் சுவைமிக்க ஆதாரங்கள். உதாரணத்திற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள் டெக்ஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு கருட ஸ்தம்பம் பற்றிச் சொல்லலாம். இந்த ஸ்தம்பத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கர். அவர் கண்ணனை என்னுடைய தலைவர், கடவுள் வாசுதேவ கிருஷ்ணன்என்று சொல்கிறார். அதேபோல் சமீபத்தில் ஆப்கானஸ்தானில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்ணன், பலராமனுடைய காசுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் என்பது அந்த காலத்தினுடைய காந்தஹார். காந்தாரி பிறந்த இடம். காந்தாரியின் சகோதரன் சகுனி பிறந்த இடம். ஆகவே கண்ணனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது என்பது நமக்குத் தெரியவருகிறது.
இரண்டாவது, மஹாபாரதம் நடைபெற்ற காலகட்டம் வழியாகவும் கண்ணனின் காலத்தை நாம் யூகிக்கலாம். மஹா பாரதம் நடந்தது சுமார் 5000 ஆண்டுகள் முன்பு. துவாரகை என்பது தற்போதைய குஜராத்தில் உள்ளது. அதிலிருந்து ஏறக்குறைய ஒரு 150 கிலோ மீட்டர் டோல வீரா என்ற இடம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகத்திலேயே முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு நகரம்என்று சொல்லலாம். உலகின் பத்து அதிசயங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துள்ளனர். டோல வீராவுக்கு நான் போயிருந்தபொழுது, ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரம் மிக செழிப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. அங்கு பல்வேறு வகையாக கட்டடங்கள் இருந்திருக்கவேண்டும். உயர்வர்க்கத்தினருக்கு, நடுத்தர வர்கத்தினருக்கு, அங்காடிகளுக்கு என பல்வேறு கட்டடங்கள் இருந்திருப்பதற்கான சான்றுகளைப் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியான குடிநீர் இணைப்பு என்று, மிகவும் பிரமிப்பான வகையில் அந்த உருவாக்கப்பட்ட நகரம்இருந்துள்ளது. இதனுடைய காலகட்டம் கிமு 3200 என்று தொல்லியலாலர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 5200 ஆண்டுகளுக்கு முன்னால்!. இது ஏறக்குறைய கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த காலகட்டம்தான். ஆகவே டோல வீராவும் கண்ணனுடைய தலைநகராயிருந்திருக்கலாம், கண்ணன் சார்ந்த ஒரு இடமாயிருக்கலாம் என்று இப்போது சொல்லுகிறார்கள்.
கண்ணன் ஒரு நேர்மறைப் பிம்பம்
கண்ணனைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. அது கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்று சொல்லுகிறது. ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜகத்குரு என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன நினைவில் தோன்றவேண்டும்? ஒரு மனிதன், 125 ஆண்டுகள் முழுமையாக, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தவர் கண்ணன் என்பதே. அதாவது ஒரு மனிதனுடைய ஒட்டுமொத்த தீரம். இதைப்பற்றி மேல்நாட்டு அறிஞர்கள், ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறதுஎன்கிறார்கள். ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு தலைவர். ஒரு தோழர்.
மட்டுமில்லாமல் இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது. கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எங்கள் அமைப்பில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உங்களுக்குச் சொன்னால், கண்ணன் எப்படி நம் வாழ்க்கையில் கலந்திருக்கிறான் என்பது புரியும்.
கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க ஏறக்குறைய 35 சூத்திரங்களை (formula) வகுத்திருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கேற்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தமுடியும். மிக மிக எளிமையான மற்றும் நடைமுறை சாத்தியங்கள் நிறைந்த சூத்திரங்கள். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. எனவேதான் கிருஷ்ண உள்ளுணர்வு நிலை (Krishna Consciousness) பற்றி ஓயாது பேசுகிறோம்.

சில உதாரணங்களைச் சொன்னால் எப்படி கண்ணனின் வாழ்வு இன்றும் பொருந்தி வருகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். குருக்ஷேத்திரப் போர் நடந்தபோது பீஷ்மருக்கு திடீரென்று ஒரு ஆசை. கண்ணனின் ரௌத்ரமான, வீரமான பாவத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார். அது முடியாத காரியம். ஏனென்றால், கண்ணன் போரின்போது ஆயுதத்தை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் பீஷ்மர் அவ்வாறு வேண்டியது கண்ணனுக்கு தெரிந்துவிட்டது. பீஷ்மர் கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு பக்தர். எனவே பக்தர் சொன்னதை கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? காத்துக்கொண்டிருக்கிறார். கால, தேச வர்தமானங்களுக்காக கண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார். பீஷ்மர் கேட்டது போரின் நான்காவது நாளில். கண்ணன் ஐந்தாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை. ஆறாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை, ஏழாவது நாள் காலை. அர்ஜூனனுடைய உயிராற்றல் மிகவும் குறைவாக இருந்தது. அர்ஜுனன் சரியாக வில்லைப் பயன்படுத்திப் போர் செய்யவில்லை.
இந்த சமயத்தில் கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். அர்ஜுனா நீ பயனற்றவன். உனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைப் பார், நான் போய் சண்டைபோட்டு பீஷ்மரை கொல்கிறேன், நீ பேசாமல் இருஎன்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறார். ஓடும்போது கண்ணெல்லாம் சிவந்துபோய்விடுகிறது. கையில் வில்லை எடுத்துக்கொண்டு போகிறார். எந்தமாதிரியான ரூபத்தை பீஷ்மர் பார்க்க ஆசைப்பட்டாரோ அந்த ரூபத்திலேயே சென்றார் கண்ணன். உடனே அர்ஜுனன் பின்னாலேயே ஓடிவந்து அவர் காலிலே விழுந்து கண்ணா! நீ இதுமாதிரி செய்யாதே, ஏனென்றால் எனக்கு கெட்டபெயர் வந்துவிடும்என்றுகூறி, அவரை அழைத்துக்கொண்டு போகிறான். அர்ஜுனனின் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும் வந்துவிடுகிறது. இதுவும் கண்ணனின் செயலே. இது ஒரு புறம் இருக்க, கண்ணன் உடனே பீஷ்மர் விரும்பிய ரூபத்தைக் காட்டிவிடவில்லை.அந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மேலாண்மை இயக்குநர் ஒருவர், தனக்குக் கீழே வேலை செய்யும் ஒருவரின் மேல் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்கூட உடனே எடுக்கக்கூடாது. தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். எந்த சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் தனது நிறுவனத்துக்குக் கெடுதல் வராதோ அப்போதுதான் செயல்படுத்தவேண்டும். கண்ணன் எந்தக் காலத்தில் இருந்து எந்தக் காலத்துக்கு அனாசாயமாகத் தாவுகிறான் என்பதைப் பாருங்கள்.

சிசுபால வதத்தின்போதும் கண்ணனிடம் நாம் ஒரு அரிய பாடத்தைப் பெறமுடியும். அவன் நூறுமுறை மட்டுமே தீயமொழி பேசமுடியும். அதைத் தாண்டினால், உடனே அவனைக் கொல்வேன் என்றான் கண்ணன். எவ்வெப்பொழுதெல்லாம் சிசுபாலன் கண்ணனைப்பற்றித் தீயமொழி பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய விரல் உயராது. அதாவது அதெல்லாம் எண்ணிக்கையில் வராது. நீ இடைப்பையன் என்பான் அவன். பேசாமல் நின்றுகொண்டிருப்பான் கண்ணன். நீ மாமாவை கொன்ற பாதகன் என்று சொல்வான். அப்போதும் பேசாமல் இருப்பார் கிருஷ்ணர். ஆனால் இதே சிசுபாலன் பீஷ்மரைப் பற்றி சொன்னவுடனேயே விரல் உயரும். தன்னைப்பற்றி என்ன சொன்னாலும் கண்ணனுக்கு கவலை இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள், தன்னுடைய சிஷ்யர்களைப் பற்றி சொன்னால் தாங்கமாட்டான். இதை நாம் இன்றைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். ஒரு மேலாண்மை இயக்குநர் (எம்.டி.) தன்னை நேரடியாக எது சொன்னாலும் கவலைப்படக்கூடாது. நீ என்ன திட்டினாலும் எனக்கு கவலை இல்லை என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் அதையெல்லாம் கடந்துவந்துவிட்டவர். ஆனால் தனது நிறுவனத்துக்கு நேர்மையாக வேலை செய்பவன் மீது யாரேனும் அவதூறு சொன்னால் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும் கண்ணனின் காலம் கடந்த பாய்ச்சல்.
இப்படி கண்ணனின் வாழ்க்கை முழுவதிலும் இருந்து நாம் இன்றைக்குத் தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். கண்ணன் இந்தியக் கலாசாரத்தின் மையம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நிகரற்ற ஓர் ஆளுமை.


0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar