வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா, அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்து முன்னிலை வகித்தார். வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.84ஆயிரம் மதிப்பிலான காசோலை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 2 பேருக்கு சலவைப் பெட்டி, 6 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இங்குள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இப்போது ரூ.1.50 லட்சம் செலவில் கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் முன்புற தோரணவாயில் சீரமைக்கப்படவுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் செய்தித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். தமிழக அரசின் சார்பில் மாலையிட்ட பிறகு திருச்சி பாரத முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் பாரதராஜா தலைமையில் செயல்வீரர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக பாரத முன்னேற்றக்கழகத்தில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டாலங்குளம் சென்றிருந்தனர். அவர்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி கிளை கழகம் சார்பில் வரவேற்பும் உபசரிப்பும் செய்யப்பட்டது. வீரன் அழகு முத்துக்கோன் 255-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதராஜா யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது; வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்த ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆண்டுதோறும் நடைபெறும் வீரன் அழகுமுத்துக்கோன் ஜயந்தி விழாவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஓய்வூதியமும் வழங்க வேண்டும். வீரன் அழகுமுத்துக்கோன் விழாவுக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்தி, போதுமான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார் பாரதராஜா மேலும், மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகள் திருட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே மணிமண்டபத்தின் பின்புறத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டார் பழுதடைந்துள்ளது. அவற்றைச் சீரமைக்க வேண்டும். மணிமண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற சில கோரிக்கைகளை அரசு முன் வைத்தனர்.
0 comments:
Post a Comment